அதிபர் தேர்தலின்போது ஒன்பது நாள் பிரசாரத்திற்கு மூன்று வேட்பாளர்களும் $1.1 மில்லியன் வரை செலவழித்துள்ளனர். இதில் பெரும்பாலான தொகை விளம்பரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.
செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 70.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்ற அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரசாரத்துக்கு ஏறக்குறைய $738,717 செலவழித்துள்ளார். இதில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது $481,226 தொகையை இணையம் அல்லாத விளம்பரங்களுக்கு அவர் பயன்படுத்தியிருக்கிறார். சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் போன்றவை இவற்றில் அடங்கும். இணைய விளம்பரத்துக்காக மட்டும் அவர் 141,865 வெள்ளியை செலவிட்டுள்ளார்.
இதே தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜிஐசியின் முன்னாள் முதலீட்டுத் தலைவர் இங் கொக் சொங், இணையம் மற்றும் சமூக ஊடகங்களை இலக்காகக் கொண்ட பிரசாரத்துக்கு $280,800 செலவழித்துள்ளார்.
இதில் $1,059 மட்டும் இணையம் அல்லாத விளம்பரங்களுக்கு செலவழிக்கப்பட்டது.
3வது வேட்பாளரான என்டியூசி இன்கம் அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாகி டான் கின் லியான் $71,366 செலவழித்தார். இதில் $69,478 இணையம் அல்லாத விளம்பரச் செலவுக்குப் பயன்படுத்தப்பட்டது. 420 மட்டுமே இணைய விளம்பரங்களுக்கு அவர் செலவழித்துள்ளார்.
வேட்பாளர்களின் தேர்தல் செலவு பற்றிய விவரங்கள் தேர்தல் துறையின் இணையப் பக்கத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இத்தகவல்கள் 2024 ஏப்ரல் 19ஆம் தேதி வரை இடம்பெற்று இருக்கும். பொதுமக்கள் ‘சிங்பாஸ்’ செயலி உதவியுடன் மின்னிலக்க சேவையில் நுழைந்து வேட்பாளர்களின் செலவுகளைப் பார்வையிடலாம் என்று அறிக்கை ஒன்றில் தேர்தல் துறை தெரிவித்தது.
தேர்தல் செலவுகளும் வேட்பாளர்கள் சமர்ப்பித்த பிரசார நிதி பற்றிய விவரங்களும் மக்களின் பார்வைக்காக இணையத்தில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை. அதிபர் தேர்தல் சட்டத்தின்படி அனைத்து வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் வேட்பாளர்களின் பிரசார நிதி பற்றிய விவரங்களை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசிதழில் தேர்தல் முடிவு வெளியிடப்பட்ட 31 நாள்களுக்குள் அதனைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் பிரசாரத்துக்கு $812,822.10 வரை செலவுசெய்ய முடியும்.
திரு தர்மனின் விளம்பரச் செலவுகளில் பெரும்பகுதி வீடுகளுக்கு அச்சிடப்பட்ட பிரசுரங்கள் அனுப்புவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக செலவழிக்கப்பட்ட தொகை $284,820.68. தேர்தல் சுவரொட்டி, பதாகைகளுக்கு அவர் $150,120 செலவழித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவர் தமது பிரசாரத்தின்போது பாசிர் பாஞ்சாங் மின் நிலையத்தைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட 650 விருந்தினர்களுடன் தேர்தல் கூட்டத்தை நடத்தினார். இதற்கான வாடகையாக அவர் $8,640 செலுத்தினார்.