பிரதமர் லீ சியன் லூங்கையும் சிங்கப்பூரின் இதர மூன்று அமைச்சர்களையும் சவூதி அரேபிய அரசாங்கம் வரவேற்று அவர்களுக்கு மதீனா நகரை வியாழக்கிழமை சுற்றிக் காட்டியது.
இஸ்லாத்தில் மெக்காவுக்கு அடுத்தபடி இரண்டாவது ஆக புனித நகர் மதீனா ஆகும்.
மதீனாவுக்கு முதல்முதலாக பயணம் மேற்கொண்ட திரு லீ, அங்குள்ள உலகின் ஆக பழமையான குபா பள்ளிவாசலைப் பார்வையிட்டார்.
பிரதமர் லீ சியன் லூங்குடன் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துறை அமைச்சர் மசகோஸ் ஸூல்கிஃப்லி, மனிதவள அமைச்சர் டான் சீ லெங் ஆகியோர் சவூதி அரேபியா பயணம் மேற்கொண்டனர்.
சிங்கப்பூர் குழுவினர் அல் உலா என்ற நகருக்கும் சென்றனர். அந்த நகரம் வரலாற்று முக்கிய வர்த்தக வழித்தடங்களில் ஓர் அங்கமாகும்.
அந்த நகரை சவூதி அரேபிய அதிகாரிகள் கலாசார சுற்றுலா இடமாக மேம்படுத்தி வருகிறார்கள்.
திரு லீ, செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சவூதி அரேபியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
அந்த நாட்டில் வேலை பார்க்கின்ற அல்லது படிக்கின்ற சுமார் 100 சிங்கப்பூரர்களுடன் திரு லீ, ரியாத் நகரில் விருந்து ஒன்றிலும் கலந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை புதன்கிழமை திரு லீ சந்தித்தார். பிரதமருக்கு இளவரசர் விருந்தளித்துச் சிறப்பித்தார்.
வர்த்தகம், முதலீடு, பசுமை எரிசக்தி, மின்னிலக்கப் பொருளியல் போன்ற துறைகளில் சிங்கப்பூருக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் உறவுகளை மேம்படுத்த இருவரும் இணக்கம் கண்டனர்.
தனியார் துறை ரீதியிலும் அரசாங்கத்திற்கு அரசாங்கம் என்ற நிலையிலும் சவூதி அரேபியாவுக்கு சிங்கப்பூர் உதவ வாய்ப்புகள் இருப்பதை திரு லீ சுட்டிக்காட்டினார் என்று பிரதமர் அலவலகம் தெரிவித்தது.
சவூதி அரேபியாவின் முதலீட்டுத் துறை அமைச்சர் காலித் அல் ஃபாலே நடத்திய சவூதி-சிங்கப்பூர் வட்டமேசைக் கூட்டத்திலும் பிரதமரும் அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் சவூதி அரேபியாவின் பிரபலமான பல நிறுவனங்களின் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூருடன் சேர்ந்து பல துறைகளில் உலகளவில் விரிவடைவதில் தங்களுக்கு நாட்டம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
வேளாண்மை, மின்னிலக்கப் பொருளியல், புத்தாக்கம், நிதிச் சேவைகள், எரிசக்தி, பெட்ரோலிய வேதித் துறை, போக்குவரத்து, தளவாடப் போக்குவரத்து ஆகியவை அந்தத் துறைகளில் அடங்கும்.
ஆசியாவில் உள்ள தொழில் வாய்ப்புகளைக் கண்டுபிடிக்க சிங்கப்பூரை நுழைவாயிலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி சவூதி அரேபிய நிறுவனங்களுக்குத் திரு லீ அழைப்பு விடுத்தார்.
திரு லீ, வெள்ளிக்கிழமை ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்ற உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்தார்.
அதில் எரிசக்தி, உணவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களைப் பற்றி இரண்டு தரப்பினர்களும் விவாதிக்க இருந்தனர்.
மத்திய கிழக்கு நிலவரம் பற்றியும் அவர்கள் விவாதிக்கும் வாய்ப்பு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

