வன்செயல்களுக்கு முடிவு கட்டுங்கள்; ஆசியான் வலியுறுத்து

வன்செயல்களுக்கு முடிவு கட்டுங்கள்; ஆசியான் வலியுறுத்து

2 mins read
20857a26-1e01-4197-8dc7-caf97777789b
குடிமக்கள் பாதுகாப்பாக, வேகமாக வெளியேறுவதற்கான பாதையை உருவாக்கும்படி சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளையும் ஆசியான் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது. - படம்: எஸ்டி கோப்புப்படம் 

மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் ஆயுதபாணி போரில் வன்செயல்கள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என்று ஆசியான் அமைச்சர்கள் கூட்டாக வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக காஸா பகுதியில் பெரிய அளவில் மனிதாபினமான நெருக்கடி கூடி வருகிறது. இந்த நிலையில், ஆசியான் அவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆசியான் தலைவர்கள் சவூதி அரேபிய தலைநகரில் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் தலைவர்களைச் சந்தித்தனர்.

ஹமாஸ் இயக்கம் அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தி 1,400 பேரைக் கொன்றுவிட்டது. மாண்டவர்களில் தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் நாட்டினரும் அடங்குவர்.

ஹமாஸ் அடிக்குப் பதிலடியாக காஸாவை இஸ்ரேல் தரைமட்டமாக்கி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 3,800 பேர் கொல்லப்பட்டுவிட்டனர்.

கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து காஸாவை இஸ்ரேல் முடக்கிவிட்டது.

இந்நிலையில், ஆசியான் அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் மேலும் மனிதாபிமான இழப்புகளைச் சம்பந்தப்பட்ட தரப்புகள் தவிர்க்க வேண்டும். அனைத்துலக மனிதாபிமான சட்டங்களை மீறாமல் அவர்கள் செயபல்படவேண்டும் என்று அறிக்கை வலியுறுத்தியது.

மத்திய கிழக்கு நிலவரம் மிகவும் கவலை தருவதாகத் தெரிவித்த ஆசியான், அனைத்துத் தரப்புகளும் பாதுகாப்பாக, விரைவாக காஸா மக்கள் வெளியேற வழி ஏற்படுத்தித்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

“ஆசியான் நாட்டினர் உள்ளிட்ட குடிமக்கள் மாண்டுவிட்டனர். பலரும் காயம் அடைந்து கிடக்கிறார்கள். இத்தகைய வன்செயல்களைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

“ஐநா பாதுகாப்பு மன்றத் தீர்மானத்தின்படி இஸ்ரேலர்களும் பாலஸ்தீனர்களும் அமைதி, பாதுகாப்புடன் அருகருகே வசிக்க வேண்டும். இதைப் பேச்சுவார்த்தை மூலம் சாதிக்க வேண்டும். இதற்கு ஆசியான் தனது ஆதரவை மறுஉறுதிப்படுத்துகிறது,” என்று அறிக்கை குறிப்பிட்டது.

ஆசியான் நாட்டினர் உள்ளிட்ட குடிமக்கள் அனைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி அனைத்துத் தரப்புகளையும் ஆசியான் அமைச்சர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

பிணையாகப் பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆசியான் நாட்டினருக்கு அவசரகால உதவியை வழங்க தாங்கள் கடப்பாடு கொண்டிருப்பதை அவர்கள் மறுஉறுதிப்படுத்தினர்.

மத்திய கிழக்கில் நீண்டகாலப்போக்கில் அமைதியும் நிலைப்பாடும் நிலவ உதவும் அமைதி நடைமுறைக்கு ஆதரவு அளிக்கும்படி அனைத்துலகச் சமூகத்தை ஆசியான் அமைச்சர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்