தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுரையில் உள்ளூர் எழுத்தாளர் மா. அன்பழகனின் ‘செம்பியன் திருமேனி’ நூல் வெளியீடு

2 mins read
4d1b22eb-3943-41c5-8ab2-32120805700b
மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்ற சிங்கப்பூர் எழுத்தாளர் மா அன்பழகனின் ‘செம்பியன் திருமேனி’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் சாலமன் பாப்பையா (நடுவில்) வெளியிட இந்திரா சௌந்தர்ராஜன் பெற்றுக் கொண்டார்.  - படம்: மா. அன்பழகன்

மதுரையில் புத்தகத் திருவிழா தொடங்கியதை முன்னிட்டு, அக்டோபர் 14ஆம் தேதி சனிக்கிழமை காலையில் உலகத் தமிழ்ச் சங்க அரங்கில் சங்க இயக்குநர் அருள் அவ்வை தலைமையில் சிங்கப்பூர் எழுத்தாளர் மா. அன்பழகனின் சரித்திரப் புனைவு நூலாகிய “செம்பியன் திருமேனி“ என்ற நூலைப் பட்டிமன்ற நாயகனும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வெளியிட பிரபல எழுத்தாளர் இந்திர சவுந்தரராசன் பெற்றுக்கொண்டார்.

சிங்கப்பூர்க் கவிஞர் கி. கோவிந்தராசு வாழ்த்துக் கவிதை வாசிக்க, இயக்குநர் அவ்வை அருள் தலைமையுரை  ஆற்றினார்.

வெளியீட்டு உரையாக பேராசிரியர் சாலமன் பாப்பையா, “பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்த்த பின் அதைப் போன்று எழுதவேண்டும் அன்ற ஆவலில் இக்கதையை சிறப்பாக எழுதியுள்ளார். ஒரு புனைவு நூல் எழுதுவதே  கடினம், இந்நிலையில் வரலாற்றுப் புதினம்  இக்காலத்தில் எழுதுவது என்பது மிகவும் அபூர்வம்.  நூலாசிரியர் இதற்கு முன் 36 நூல்களை எழுதிய அனுபவத்தில்,  இதற்கென்றே சோழநாட்டுக்கு வந்து பல இடங்களை ஆய்ந்தறிந்து அற்புதமாக இரு சோழ குறுநில மன்னர்களுக்கிடையே நடக்கும் ஊடல், கூடல்களை வைத்துப் புனைந்துள்ள அன்பழகனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்,” என்றார்.

நூலைப் பெற்றுக்கொண்ட எழுத்தாளர் இந்திரா சவுந்திரராசன், “ஒரு நூலை எழுதுவதில் உள்ள பிரசவ வலியையும், சுமையையும் எங்களைப் போன்ற எழுத்தாளர்களினால்தான் உணரமுடியும். அந்த வகையில் ஒரு சிறந்த காவியத்தை அன்பழகன் படைத்துள்ளார். இது பொன்னியின் செல்வனைப்போல் புகழடைந்து வெற்றி பெறும்,” என்று சொல்லி வாழ்த்தினார். 

இந்த நூலுக்குள் பல கோட்டோவியங்களை வரைந்த சிவகங்கை ஓவியர் முத்துக்கிருட்டினன் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். நூலை உருவாக்கிய டிஸ்கவரி புக் பேலசின் வேடியப்பன் நன்றிகூற இறுதியில் நூலாசிரியர் அன்பழகன் ஏற்புரை வழங்கி எல்லாருக்கும் நன்றி கூறினார்.