சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் 2020 ஜூலை முதல் 2023 ஜூன் வரை, வரிகள் மற்றும் அபராதத் தொகையாக $79 மில்லியனை வசூலித்து உள்ளது.
நிறுவனங்களில் நடத்தப்பட்ட கணக்குத் தணிக்கைக்குப் பிறகு இந்தத் தொகை திரட்டப்பட்டதாக ஆணையம் வெள்ளிக்கிழமை கூறியது.
2019 முதல் 2021 வரையிலான வரி மதிப்பீட்டு ஆண்டுகளில் நிறுவனங்கள் தவறுதலாகத் தாக்கல் செய்த வருமான வரி அறிக்கைகள் தொடர்பானவை இந்த வரி மற்றும் அபராதத் தொகை என்றும் அது தெரிவித்தது.
வரி ஒழுங்குமுறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் அந்த நிறுவனங்களில் மேற்கொண்ட கணக்குக் தணிக்கைகளுக்குப் பிறகு இந்தத் தொகைகள் அந்நிறுவனங்களிடம் இருந்து மீட்கப்பட்டன.
இவற்றில் மூன்றில் இரு மடங்கு தவறுகள் தரவுப் பகுப்பாய்வு இணையக் கருவிகளின் உதவியுடன் ஆணையம் மேற்கொண்ட கணக்குத் தணிக்கைத் திட்டங்களின்போது தெரிய வந்தன.
எஞ்சிய தவறுகள், சூழலுக்கேற்பவும் ரகசியமாகக் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையிலும் குத்துமதிப்பாக நடத்தப்பட்ட தர பகுப்பாய்வுச் சோதனைகளில் அடையாளம் காணப்பட்டன.
வருமான வரிப் படிவத் தாக்கலின்போது நிறுவனங்கள் நான்குவிதத் தவறுகளைச் செய்ததாக ஆணையம் குறிப்பிட்டது. முழுமையற்ற வருவாய்ப் பதிவு காரணமாக வருமானத்தைக் குறைவாகக் காட்டுவது அல்லது வருமானத்தைக் காட்டாமல் விட்டுவிடுவது என்னும் தவறு அவற்றுள் அடங்கும் என்றது அது.
உணவு, பான நிறுவனங்கள் உணவு விநியோகத் தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் மூலம் நடைபெற்ற விற்பனை மூலம் கிடைத்த வருவாயை வரிப் படிவத் தாக்கலின்போது குறிப்பிடாமல் விட்டுவிடும் தவறும் நிகழ்வதாக ஆணையம் தெரிவித்தது. அதேபோல, குடும்பங்களால் நிர்வகிக்கப்படும் அல்லது நடத்தப்படும் நிறுவனங்கள் ஆவணங்களைச் சரிவரப் பராமரிப்பதில்லை என்ற தகவலையும் அது வெளியிட்டது.
தொடர்புடைய செய்திகள்
நிறுவன இயக்குநர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தின் மீதான வரிக் கழிவுகளுக்குரிய சில கோரிக்கைகள், வழங்கப்பட்ட சேவைகளுடன் பொருந்துவதில்லை என்றது ஆணையம்.