டிபிஎஸ் வங்கியின் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் ‘பேலா’ சேவையை பயன்படுத்த முடியவில்லை என்று வெள்ளிக்கிழமை (அக்.20) காலை முதல் அவ்வங்கியிடம் புகார் அளித்துள்ளனர்.
காலை 7.45 மணிமுதல் டவுன் டிடெக்டர் (The Downdetector) என்ற இணையத்தளம் டிபிஎஸ் வங்கியின் சேவைத் தடைகள் சார்ந்த புகார்கள் காலை 7.45 மணிமுதல் அதிகரித்தது என்று பதிவிட்டது. காலை 9 மணிக்குள் 397 வாடிக்கையாளர்கள் வங்கியின் இணையத்தளத்தில் சேவைத்தடை பற்றி பதிவிட்டுள்ளனர்.
காலை 10 மணியளவில், ‘பேலா’ சேவை விட்டுவிட்டுச் செயல்படுவதால், இதர வழிகளான கிரெடிட் கார்ட் (கடன் அட்டை) அல்லது வருடி கட்டணம் செலுத்தும் ஸ்கேன்பே முறைகளை பயன்படுத்துமாறு டிபிஎஸ் வங்கி அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவுறுத்தியது.
மதியம் 12.50 மணி நிலவரப்படி, சேவை 11.40 மணிமுதல் வழக்கநிலைக்கு திரும்பியதாக டிபிஎஸ் வங்கி தெரிவித்தது.
‘பேலா’ சேவையை உணவங்காடிக் கடைகளில் வெள்ளிக்கிழமை பயன்படுத்தும் முதல் 100,000 வாடிக்கையாளர்கள் $3 கழிவைப் பெறுவார்கள் என்ற சலுகையை டிபிஎஸ் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்திருந்தது.
இது சிறு வர்த்தகர்களை ஆதரிக்கும் நோக்கில் டிபிஎஸ் வங்கி ஆரம்பித்த நடவடிக்கை. அதன்படி நேற்று காலை முதல் பலர் ‘பேலா’ சேவைத் தடையால் இக்கழிவைப் பெறமுடியாமல் பாதிக்கப்பட்டனர்.
ஜெரோம் என்ற வாடிக்கையாளர் ஒருவர் உணவுக் கடையில் சேவைத் தடையால் பரிவர்த்தனை செய்யமுடியவில்லை. வரிசையில் பின்னால் நின்ற மற்றவர்கள் முன்னிலையில் அவமானம் ஏற்பட்டதாக தமது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
தொழில்நுட்பம் தேவைக்கேற்ப செயல்படவில்லை என்றும் மனம் வருந்தினார்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் குறிப்பிட்டபடி, தகுதிபெற்ற முதல் 100,000 வாடிக்கையாளர்கள் அனைவரும் இவ்வாரத்துக்கான அந்தச் சலுகைக் கழிவை திரும்பப்பெற்றுவிட்டனர் என்று 11.46 மணிக்கு டிபிஎஸ் வங்கி தெரிவித்தது.
விசாரணையில் மற்ற அமைப்புகளும் பயன்படுத்தும் தகவல் நிலையத்தில் சேவை தடைப்பட்டதே இதற்குக் காரணம் என்று டிபிஎஸ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (அக்.14) பிற்பகல் டிபிஎஸ் வங்கியின் ஏடிஎம் சேவை, இணையத்தளம், கடன் அட்டைச் சேவைகள் அனைத்தும் தடைபட்டன. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (அக்.15) காலை சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பின என்பதும் குறிப்பிடத்தக்கது.

