மூத்தோரிடம் வாழ்நாள் கற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் தேசிய நூலக வாரியத்தின் ‘உங்கள் வாழ்க்கையின் முதுமையான நேரம்: ஒரு கொண்டாட்டம்’ என்னும் வருடாந்திர கொண்டாட்ட நிகழ்வு இவ்வாண்டு நடந்து வருகிறது.
‘முதுமையில்லா படைப்பாற்றல், விலைமதிப்பற்ற வாய்ப்புகள்’ என்னும் கருப்பொருளுடன் கூடிய இவ்வாண்டின் இக்கொண்டாட்ட விழாவையொட்டி தீவு முழுவதும் மொத்தம் 80க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
இக்கொண்டாட்ட நிகழ்வுகள் இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்தே (அக்டோபர் 1) தொடங்கிய நிலையில், இதன் அதிகாரபூர்வ தொடக்கவிழா அக்டோபர் 20ஆம் தேதி தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் பிற்பகல் 3 மணிமுதல் 4.30 மணிவரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இம்மாதம் 31ஆம் தேதி வரை நடைபெறும் இக்கொண்டாட்டத்தில் கற்றல் அனுபவ நிகழ்வுகள், சுகாதார மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பயிலரங்குகள், திறமைகளை வெளிக்கொணரும் நிகழ்வுகள் உட்பட பல்வேறு வகையான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து நிகழ்வுகளுக்கும் அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடாந்தரக் கொண்டாட்ட விழாவினை 2020ஆம் ஆண்டு முதல் தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துவருகிறது.
இதனைத் தொடர்ந்து தேசிய நூலக வாரியத்தின் சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகமும் சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகமும் இணைந்து ‘வாங்க பேசலாம்’ எனும் மூத்தோர் நினைவாற்றலைத் தூண்டும் விளையாட்டை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக, டிமென்சியா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் முத்தோரின் நினைவாற்றலை அதிகரிக்க இந்த விளையாட்டு பெரிதும் உதவும். அனைத்து வயதினரும் விளையாட உகந்த இந்த விளையாட்டு மக்களும் இடங்களும், கம்போங் நாள்கள், தேசிய இயக்கங்கள் என மூன்று கருப்பொருள்களுடன் அமைகிறது. இந்த இணையத்தள முகவரியில் https://go.gov.sg/xg2oxm இந்த விளையாட்டில் பங்குகொள்ள பதிவு செய்யலாம்.
மேலும் இக்கொண்டாட்டத்தினையொட்டி தேசிய நூலக வாரியம் ‘ஞாபக அட்டைகள்’ எனும் புதிய மின்னிலக்க விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பழைய கால சிங்கப்பூரின் புகைப்படங்கள் கொண்ட அட்டைகள் இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
இதன்மூலம் சிங்கப்பூரின் வரலாற்றையும் மரபுடைமையையும் நினைவுகூறும் அதே சமயம் பொதுமக்கள், குறிப்பாக மூத்தோர் தங்கள் நினைவுகளையும் அசைபோடமுடியும். இவ்விளையாட்டினை https://go.gov.sg/toyl-resources எனும் இணையத்தள முகவரியில் தேசிய நூலக வாரியத்தின் இணையத்தளத்தின் வாயிலாக இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இக்கொண்டாட்டத்தையொட்டிய அனைத்து நிகழ்வுகளுக்குமான பதிவிற்கும் கூடுதல் தகவல்களுக்கும் https://go.gov.sg/toyl2023 இணையத்தள முகவரியை நாடலாம்.

