நுண்பாசியில் இருந்து எண்ணெய்: அதிக அளவில் தயாரிக்க திட்டம்

நுண்பாசியில் இருந்து எண்ணெய்: அதிக அளவில் தயாரிக்க திட்டம்

1 mins read
c17be6f5-bfa0-4434-a8b5-3baf1b3bb31b
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணவர் ஆரோன் லி (இடது), இந்தப் பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல், தொழில்நுட்பச் செயல்திட்ட பேராசிரியர் வில்லியம் சென் ஆகியோர். - படம்: எஸ்டி

நுண்ணிய பாசிகளில் இருந்து தயாரிக்கப்படும் மாற்று செம்பனை எண்ணெய்த் தயாரிக்கும் முறையை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கண்டுபிடித்து இருக்கிறது.

ஈவ்ஸ் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் சேர்ந்து அந்த மாற்று எண்ணெய் அதிக அளவில் தயாரிக்கப்படும் என்று இப்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஈவ்ஸ் எனர்ஜி நிறுவனம், பருவநிலை பாதிப்பு இல்லாத புத்தாக்கங்களில் சிறப்பு வல்லமை பெற்ற நிறுவனம் ஆகும்.

அது அமெரிக்காவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட முயன்று வருகிறது.

பாசி எண்ணெய்த் தயாரிப்பு ஆலை இந்தோனீசியாவின் செராம் தீவில் 3,000 சதுர கி.மீ. பரப்பளவு இடத்தில் அமையும் என்று ஈவ்ஸ் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் தலைவருமான லான்ஸ் சான் தெரிவித்தார்.

அந்த ஆலை, 400,000 எண்ணெய்த் தொட்டிகளுடன் தொடங்கப்படும். 2026ஆம் ஆண்டு முடிவில் அது 1.2 மில்லியன் டன் நுண்பாசி எண்ணெய்யைத் தயாரிக்கும். அதோடு, 1.2 மில்லியன் டன் பாசி உணவுப் பொருளையும் அது தயாரிக்கும்.

இந்தத் தொடக்க அளவு தயாரிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், அந்த தயாரிப்புத் திட்டம் காரணமாக காற்று மண்டலத்தில் இருந்து 2.6 மில்லியன் டன் கரியமில வாயு அகற்றப்படும் என்று மதிப்பிடப்படுகிறது.

இந்த வட்டாரத்தில் ஏற்படக்கூடிய தூசு மூட்டத்தைக் குறைக்கும் ஆற்றலும் அதற்கு உண்டு என்று டாக்டர் சான் தெரிவித்துள்ளார்.