சிங்கப்பூரின் ஆகப் பெரிய ஒருங்கிணைந்த சுகாதாரச் சேவை வழங்கும் சிங்ஹெல்த் எனப்படும் சிங்கப்பூர் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம், அதிபர் சவால் 2023க்கென $1.3 மில்லியன் நிதி திரட்டியுள்ளது.
அந்த அறிவிப்பை, சனிக்கிழமை அதிபர் தர்மன் சண்முகரத்னம் முன்னிலையில் சிங்ஹெல்த் தெரிவித்து அதற்கான காசோலையையும் அவரிடம் வழங்கியது.
இந்த நிகழ்வு, சிங்கப்பூர் தேசிய கண்பார்வை நிலையத்தில் (எஸ்என்இசி) நடைபெற்றது. அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நன்கொடைக்கான மாதிரிக் காசோலையை நன்றியுடன் பெற்றுக்கொண்டார்.
சிங்ஹெல்த் குழுமத்தின் அங்கமாகிய தேசிய கண்பார்வை நிலையத்தின் தலைமையில், பாசமுள்ள கைகள் (கேரிங் ஹேன்ட்ஸ்), பரிவான இதயங்கள் (கொம்பாஷனெட் ஹார்ட்ஸ்) ஆகிய அமைப்புகள், தொடர்ந்து 19வது ஆண்டாக இந்த நிதித்திரட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளன.
மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவச் சேவை வழங்கும் நிபுணர்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் சிங்ஹெல்த் ஊழியர்களும் இந்த நிதித் திரட்டில் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 32,000க்கும் மேற்பட்டோர் இம்முயற்சியில் அடங்குவர். அவர்கள் பலதரப்பட்ட நிதி திரட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் அதிபர் சவால் என்ற நிதி திரட்டும் இயக்கம் அதிபரின் தலைமையில் சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் கடந்த 2000ல் தொடங்கப்பட்டது. தொண்டூழிய உணர்வு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வேலையிடச் சூழல் ஆகியவற்றுடன் இணைந்து பரிவுமிக்க பாசம் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க சிங்கப்பூரர்களை ஊக்குவிக்கின்றது இந்த இயக்கம்.