காஸாவில் குடிமக்களைக் காப்பதும் உதவிப்பொருள்கள் விரைவதும் மிக முக்கியம்: அதிபர் வலியுறுத்து

காஸாவில் குடிமக்களைக் காப்பதும் உதவிப்பொருள்கள் விரைவதும் மிக முக்கியம்: அதிபர் வலியுறுத்து

2 mins read
fb9d794c-9c42-473e-b87c-db17f8617737
அதிபர் தர்மன் சண்முகரத்னம் (நடு), அனைத்து சமய அமைப்பின் தலைவர் நூர் மரைக்கான் (ஒலிபெருக்கியுடன்), அந்த அமைப்பின் இதர பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை பன்மயத்தில் நல்லிணக்கக் கலைக்கூடத்தில் கூட்டாக வழிபட்டனர்.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

இஸ்ரேல்-ஹமாஸ் போர் சூழலில் அப்பாவி குடிமக்களைக் காப்பதும் காஸாவுக்குள் அதிக அளவு மனிதாபிமானப் பொருள்களை அனுமதித்து பேரிடரைத் தவிர்ப்பதும்தான் மிகமிக முக்கியமானது என்று சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் வலியுறுத்திக் கூறி இருக்கிறார்.

வரும் வாரங்களில், மாதங்களில் குடிமக்களைக் காப்பதும் ஒட்டு மொத்தமாக மக்களைத் தண்டிப்பதைத் தவிர்ப்பதும்தான் மிக முக்கியமானவை என்று ஃபேஸ்புக்கில் அதிபர் தெரிவித்தார்.

தென் காஸாவுக்குள் முதன்முதலாக சனிக்கிழமை 20 வாகனங்களில் மனிதாபிமான உதவிப்பொருள்கள் அனுப்பப்பட்டன.

அதனை அடுத்து அதிபர் இவ்வாறு வலியுறுத்தி இருக்கிறார்.

இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் தாக்கியதால் இஸ்ரேலியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், அதேபோல் இஸ்ரேல் தாக்குவதால் பாலஸ்தீனர்கள் அனுபவிக்கும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டிய அதிபர், இரு தரப்புகளிலும் அப்பாவி மக்கள் பலியாவதை நியாயப்படுத்த முடியாது என்றார்.

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு இரு நாட்டு ஏற்பாடுதான் தீர்வு. அதைப் பேச்சுவார்த்தை மூலம் சாதிப்பதுதான் ஒரே வழி என்பதே சிங்கப்பூரின் நிலை என்பதை அதிபர் தர்மன் மீண்டும் வலியுறுத்தினார்.

அத்தகைய தீர்வு மூலம் இரு தரப்பினரும் அமைதி, பாதுகாப்பு, கண்ணியத்துடன் வாழ முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரின் அனைத்து சமய அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் சுமார் 80 பேர், மேக்ஸ்வெல் ரோடு தேசிய வளர்ச்சி அமைச்சு கட்டடத்தில் உள்ள பன்மயத்தில் நல்லிணக்கக் கலைக்கூடத்தில் வழிபாட்டுக்கூட்டம் நடத்தினர்.

அதைத் தொடர்ந்து திரு தர்மன் தனிப்பட்ட முறையில் சமயத் தலைவர்களுடன் பேசினார்.

‘‘நாங்கள் நல்ல முறையில் பேச்சு நடத்தினோம். பல இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் சிங்கப்பூரில் அவை கட்டிக்காக்கப்பட வேண்டும் என்பதையும் மறுஉறுதிப்படுத்தினோம்,’’ என்று அதிபர் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

இவ்வேளையில், சவூதி அரேபியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் லீ சியன் லூங், கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார்.

சிங்கப்பூர் நாடாளுமன்றம் நவம்பர் மாதத் தொடக்கத்தில் கூடும்போது இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையில் சிங்கப்பூர் நிலை பற்றி மன்றம் விவாதிக்கும் என்று திரு லீ தெரிவித்து இருந்தார்.

இஸ்ரேல்-பாலஸ்தீன நிலவரம் பற்றி ஏற்கெனவே பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தில் கேள்விகளைத் தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்