தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகில் முதல்முறையாக அமோனியா திட்டத்தைத் தொடங்கும் சிங்கப்பூர்

2 mins read
b12b65ff-eb9a-49cc-a99c-6d4b2089e117
அமோனியா போக்குவரத்து தொழில்நுட்பம் நன்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகிலேயே முதல் முறையாக சிங்கப்பூர், மின்சார உற்பத்திக்கு அமோனியாவைப் பயன்படுத்தும் வர்த்த ரீதியிலான திட்டத்தை தொடங்கவிருக்கிறது.

2050ஆம் ஆண்டில் தேவைப்படும் எரிசக்தியில் 50 விழுக்காட்டுக்கு ஹைட்ரஜனைப் பயன்படுத்துவது அதன் இலக்காகும்.

இது தொடர்பாக திங்கட்கிழமையன்று பேசிய வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், அம்மோனியா போக்குவரத்து தொழில்நுட்பமும், அனைத்துலக அளவில் விநியோகத் தொடரும் நன்கு நிறுவப்பட்டுள்ளது என்றார்.

மரினா பே சேண்ட்சில் நடைபெறும் சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று அமைச்சர் பேசினார். வரும் வெள்ளிக்கிழமை வரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.

“மின் உற்பத்திக்கும் கடற்துறை கப்பல்களுக்கும் நேரடி எரிபொருளாக அம்மோனியாவைப் பயன்படுத்தக் கூடிய சாத்தியம் உள்ளது,” என்று திரு கான் குறிப்பிட்டார்.

காற்றில் கலந்துள்ள நைட்ரஜனுடன் ஹைட்ரஜன் சேரும்போது அம்மோனியா உருவாகிறது. அதிகளவு ஹைட்ரஜனை சிறிய கொள்கலன்களில் நீண்ட தூரம் கொண்டு செல்வதற்கு அதிக எரிபொருளும் தேவைப்படாது. அந்த வகையில் எரிபொருள் செலவும் குறைவு.

ஹைட்ரஜன், எரிக்கப்படும்போது பூமியின் வெப்பத்தை அதிகரிக்கும் கரிம வெளியேற்றமும் இருக்காது.

குறைவான கரிமக்கழிவு அல்லது கரிமக் கழிவு இல்லாத அம்மோனியாவை இறக்குமதி செய்து அதிலிருந்து 55 முதல் 65 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்வது சிங்கப்பூரின்அம்மோனியா திட்டத்தில் அடங்கும் என்று எரிசக்தி சந்தை ஆணையம் திங்கள்கிழமை அன்று தெரிவித்தது.

இத்திட்டம் ஜூரோங் தீவில் இடம்பெறும்.

அம்மோனியா திட்டத்தில் அரசாங்கத்துடன் நெருக்கமாகச் செயல்படும் திட்ட மேம்பாட்டாளர், ஆண்டுக்கு குறைந்தது 0.1 மில்லியன் டன் அம்மோனியாவை சேகரித்து வைக்கும் வசதிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

கடந்த டிசம்பர் 2022ஆம் ஆண்டில் அம்மோனியா திட்டங்களில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்களுக்கு எரிசக்தி சந்தை ஆணையமும் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையமும் அழைப்பு விடுத்திருந்தன.

இதற்கு உள்ளூர், வெளிநாடுகளிலிருந்து 26 உத்தேசத் திட்டங்கள் சமர்பிக்கப்பட்டன என்று திரு கான் தெரிவித்தார்.

அடுத்த கட்டமாக இதிலிருந்து ஆறு நிறுவனங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாண்டு இறுதியில் உத்தேச திட்டங்களை சமர்பிக்க நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படும்.

குறிப்புச் சொற்கள்