சிங்கப்பூர் மூலாதார பணவீக்கம் ஐந்தாவது மாதமாக செப்டம்பரில் மெதுவாக அதிகரித்தது. இதற்கு முக்கிய காரணம் உணவு, சில்லறைப் பொருட்களுடன் மற்ற பொருட்களின் விலையேற்றமும் குறைவாக இருந்ததே.
சிங்கப்பூர் குடும்பங்களின் செலவினத்தை எடுத்துக் காட்டும் வகையில், தனியார் போக்குவரத்துச் செலவு, தங்குமிட செலவு போன்றவற்றை தவிர்த்துப் பார்க்கும்போது, மூலாதார பணவீக்கம் செப்டம்பர் மாதம் 3% அதிகரித்ததாக திங்கட்கிழமை வெளியான அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டின. இது ஆகஸ்ட் மாத பணவீக்க உயர்வான 3.4 விழுக்காட்டை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், மொத்த பணவீக்கம் செப்டம்பர் மாதம் 4.1% அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் மாத மொத்த பணவீக்க உயர்வான 4 விழுக்காடுடன் ஒப்பிடும்போது சற்று அதிகம். வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்ததால் தனியார் போக்குவரத்து செலவின அதிகரிப்பு மூலாதார பணவீக்க இறக்கம், தங்குமிட செலவு குறைந்தது ஆகியவற்றை மிஞ்சின.
மாத அடிப்படையில், உணவு விலை அதிகரிப்பு, சேவைத் துறை கட்டண உயர்வு போன்றவற்றால் செப்டம்பர் மாதம் பயனீட்டாளர் விலை உயர்வு 0.1% கூடியது.
அதே சமயம், மொத்த பணவீக்கம், குறிப்பாக தனியார் போக்குவரத்துச் செலவின அதிகரிப்பால், மாத அடிப்படையில் 0.5% உயர்வு கண்டது.
ஆண்டு அடிப்படையில் டிசம்பர் மாதம் மூலாதார பணவீக்கம் 2.5 விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காடு வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், 2024ஆம் ஆண்டு முழுவதற்கும் மூலாதார பணவீக்கம் 2.5 விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காட்டுக்கு குறையும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் நேற்று தெரிவித்தன. இது இம்மாதம் 13ஆம் தேதி வெளியிடப்பட்ட முன்னுரைப்புகளை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளன.
அத்துடன், மொத்த பணவீக்கம் 2023ஆம் ஆண்டு சராசரியாக 5% இருக்கும் என்றும் 2024ஆம் ஆ:ண்டில் 3லிருந்து 4 விழுக்காட்டுக்குள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
“அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மூலாதார பணவீக்கம் பொருள், சேவை வரி, மற்ற பருவகால விளைவுகளால் பாதிக்கப்படும். எனினும், இறக்குமதி செலவுகள் குறைவாலும் ஊழியர் சந்தையில் உள்ள இறுக்கமான சூழல் குறையும் என்பதாலும் 2024ஆம் ஆண்டில் மூலாதார பணவீக்கத்தின் மெதுவடையும் போக்கு தொடரும்,” என்று ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், வாகன உரிமைச் சான்றிதழ் கட்டண அதிகரிப்பால், மொத்த பணவீக்க விகிதம் அதிகரிக்கும் என்றும் ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் கூறுகின்றன.

