தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்-ஐக்கிய அரபு சிற்றரசுகள் 8 உடன்பாடுகளில் கையெழுத்து

2 mins read
5bce8f09-49f5-45b2-ac5b-c4040ab1876e
அபு தாபி அதிபர் மாளிகையில் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் அதிபர் முகமது ஸையத் அல் நஹ்யானை பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். - படம்: சிங்கப்பூர் தொடர்பு தகவல் அமைச்சு

ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சநிலை மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் சிங்கப்பூரும் ஐக்கிய அரபு சிற்றரசுகளும் தீர்க்கமான சில முடிவுகளை உறுதிப்படுத்துவதற்கான கடப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளன.

கரிம வெளிப்பாட்டைக் குறைத்தல், பருவநிலை மாற்ற நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தல், எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளுக்கு நிதி ஆதரவு வழங்குதல் போன்றவை அந்தக் கடப்பாடுகள்.

பருவநிலை மாற்ற ஒத்துழைப்பு தொடர்பில் இரு நாடுகளும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளன.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் அதிபர் முகமது ஸையத் அல் நஹ்யானும் அபு தாபியில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சந்திப்புக்குப் பின்னர் இந்த அறிக்கை வெளியானது.

பசுமைச் சுற்றுசூழல் தொடர்பான வேலைகளை உருவாக்கவும் பருவநிலை மாற்ற இலக்குகளை வேகப்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

அதற்கு உதவியாக, பசுமைப் பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் கரிம எரிசக்திப் பயன்பாட்டைக் குறைக்கவும் அவ்விரண்டு நாடுகளும் இணங்கியதோடு உணவுப் பாதுகாப்பு அம்சத்திலும் கவனம் செலுத்த ஒப்புக்கொண்டன.

ஓர் உடன்பாடு, ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் பரிமாற்றத்தை திரு லீயும் ஷேக் முகமதுவும் பார்வையிட்டனர். அவற்றில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மின்னிலக்கத் தொழில்நுட்பம் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பானவை.

மற்ற இரண்டும் கல்வி மற்றும் ஹலால் தயாரிப்புகளின் வர்த்தகத்தை வலுப்படுத்துவது தொடர்பானவை.

நவம்பர் இறுதியில் துபாயில் ஐநாவின் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சநிலை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வரும் வேளையில் பிரதமர் லீயின் ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கான வருகை அமைந்துள்ளது.

பருவநிலை மாற்றம் தொடர்பான பலதரப்பு நடைமுறைகளுக்குள் நம்பிக்கையை மீட்டெடுக்க, நிதி தொடர்பான கடப்பாடுகளை வெளிப்படுத்துவதில் இரு தலைவர்களும் மறுஉறுதி எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக, காலையில் பிரதமர் லீயும் அவரது பேராளர் குழுவினரும் அபு தாபி தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கு வருகை அளித்தனர்.

ஐக்கிய அரபு சிற்றரசுகளின் எரிசக்தி உருமாற்றத் திட்டங்களின் வருங்காலம் குறித்தும் பருவநிலை மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்தும் அவர்களுக்கு அங்கு விளக்கிச் சொல்லப்பட்டது.

குறிப்புச் சொற்கள்