‘டிரேடினேஷன்’, மற்றும் ‘டிரேட்லக்ஷுரி’ என்ற இரு நிறுவனங்களிடம் சொகுசுப் பொருள்களுக்காக $2.84 மில்லியன் தொகை கொடுத்து அவற்றைப் பெற முடியாமல் போன நான்கு வாடிக்கையாளர்கள் வழக்குகள் தொடுத்து அவற்றில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தாங்கள் கொடுத்த பணத்தை காவல்துறை பறிமுதல் செய்துள்ளதை அடுத்து அதைத் திரும்பப் பெறும் முயற்சியில் அவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
இவ்விரு நிறுவனங்களுக்கு எதிராக கடந்த மே மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் காவல் துறையிடம் 187 புகார்கள் பதிவாயின. அதில் இவ்விரு நிறுவனங்களும் சொகுசு கைக்கடிகாரங்கள், கைப்பைகள் ஆகியவற்றை வாங்குவதற்காக முழுத் தொகையையும் பெற்றுக் கொண்டு அவற்றை தரவில்லை என்று புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த வர்த்தகத்துக்கு சொந்தக்காரர்களான சிங்கப்பூரரான பி ஜியாபெங் அவரது மனைவி தாய்லாந்தைச் சேர்ந்த பன்சுக் சிரிவிபா ஆகிய இருவரும் மலேசியாவில் பதிவான லாரியில் 2022ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி தப்பியோடினர்.
இவர்களை மலேசிய காவல்துறையினர் ஜோகூரில் உள்ள ஒரு மலிவுக் கட்டண ஹோட்டலில் கைது செய்து ஆகஸ்ட் 11ஆம் தேதி சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
பன்சுக் மீது தற்பொழுது 172 குற்றச்சாட்டுகள் உள்னன. இவற்றில் ஏமாற்று வேலை, மோசடி வர்த்தகம் தொடர்பான குற்றச்சாட்டுகளும் அடங்கும். பி ஜியாபெங் ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். இவை அனைத்திலும் விசாரணை, நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன.

