ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள பெரிய தரைவீடு மீண்டும் வாடகைச் சந்தைக்கு வந்துள்ளது. மாதம் $120,000 என்பது அதன் மாத வாடகை.
நாசிம் ரோட்டில் உள்ள ஜிசிபி எனப்படும் உயர்தர பங்களா வீடு வாடகைக்கு விடப்படுவதற்கான விளம்பரம் அக்டோபர் 16ஆம் தேதி காணப்பட்டது. இந்த வகை பங்களா வீட்டின் விலை ஏறக்குறைய $50 மில்லியனாக இருப்பது வழக்கம்.
அந்த மலைஉச்சி பாணி பங்களா வீட்டில் ஐந்து படுக்கையறை, ஐந்து குளியலறைகள் மற்றும் நீச்சள் குளம் ஆகியன உள்ளன. பங்களா வீட்டின் மொத்த பரப்பளவு 15,000 சதுர அடி. ஷங்க்ரிலா சிங்கப்பூர் ஆடம்பர ஹோட்டலின் 500 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் அது உள்ளது.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் $2.8 பில்லியன் மோசடிச் சம்பவத்தில் தொடர்புடைய சு பாவோலின், 41, என்னும் கம்போடிய நாட்டவர் அந்த பங்களா வீட்டில் வாடகைக்கு இருந்தார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி வர்த்தக விவகாரத் துறை அம்பலப்படுத்திய மோசடிச் சம்பம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டவர்களில் சு பாவோலினும் ஒருவர். கைதான அத்தனை பேரும் சீனாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
சிங்கப்பூரில் நடைபெற்ற ஆகப்பெரிய மோசடிச் சம்பவங்களில் ஒன்றான இதனைக் கண்டுபிடிக்க கிட்டத்தட்ட 400 அதிகாரிகள் பணியாற்றினர்.
சு பாலோலின் குடும்பம் அந்தச் சொத்தை விட்டு வெளியேறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. இருப்பினும், ஃபெராரி காரும் பல ஜப்பானிய ஆடம்பர கார்களும் அந்த பங்களாவில் இன்னும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இதற்கிடையே, எவர்ட் பார்க்கில் உள்ள 32,000 சதுர அடி ஜிசிபி உயர்தர பங்களா வீடு ஒன்றும் காலி செய்யப்பட்டுவிட்டதாக தெரிய வந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்த வீட்டில் தங்கியிருந்த சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த வூ கின், 40, என்பவரும் இதே மோசடிச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர். 2019ஆம் ஆண்டு அன்பர் தினத்தில் மணமுடித்த அவர், 2021 ஜூலையில் இந்த பங்களா வீட்டில் குடியேறினார்.
அவரது குடும்பம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்த வீட்டிலிருந்து வெளியேறியதாக அங்கு வேலை செய்த இந்தோனீசிய பணிப்பெண் தெரிவித்தார்.