பல்வேறு அமைச்சுகளில் நிரந்தரச் செயலாளர்கள் நியமனம்

பல்வேறு அமைச்சுகளில் நிரந்தரச் செயலாளர்கள் நியமனம்

2 mins read
a529c644-f441-4c08-9649-06dfbd9bce78
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் தலைமைச் செயலாக்க அதிகாரியாகவும் இருந்த ஜெஃப்ரி சியாவ் மனிதவள அமைச்சின் இரண்டாம் நிரந்தரச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். - படம்: பொதுச் சேவைப் பிரிவு

எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் தலைமைச் செயலாக்க அதிகாரியாகவும் இருந்த ஜெஃப்ரி சியாவ் மனிதவள அமைச்சின் இரண்டாம் நிரந்தரச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் அந்தப் பொறுப்பை 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஏற்பார் என்று பிரதமர் அலுவலகம் திங்கட்கிழமை தெரிவித்தது.

திரு சியாவ், 45, பிரதமர் லீ சியன் லூங்கின் தலைமை அந்தரங்கச் செயலாளராக 2017 முதல் 2021 வரை பணியாற்றினார்.

செம்டம்பர் 2021 முதல் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் பொறுப்புகளை ஏற்ற திரு சியாவ், மனிதவள அமைச்சு, அரசாங்க சேவை பயிற்சிக் கல்லூரி, பொதுச் சேவைப் பிரிவு, கல்வி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றிலும் பொறுப்புகளை வகித்தவர்.

திருவாட்டி டான் கீ கியாவ் தற்போது வகிக்கும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளர் பொறுப்பிலிருந்து 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அன்று விலகுவார். அதேவேளையில் பொதுச் சேவைப் பிரிவின் நிரந்தரச் செயலாளர் பொறுப்பில் தொடர்வார்.

தேசிய வளர்ச்சி அமைச்சின் நிரந்தரச் செயலாளராக உள்ள திருவாட்டி டியோ ஸின் வூன், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சில் திருவாட்டி டான் வகித்த பொறுப்பை ஏற்பார். மேலும் இவ்வாண்டு மே மாதம் ஏற்ற பொதுச் சேவைப் பிரிவின் மேம்பாட்டுத் துறையின் நிரந்தரச் செயலாளர் பொறுப்பிலும் திருவாட்டி டியோ தொடர்வார்.

இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து தற்காப்பு அமைச்சின் தற்காப்பு மேம்பாட்டுக்கான நிரந்தரச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட திரு மெல்வின் ஓங், கூடுதலாக தேசிய வளர்ச்சி அமைச்சின் மேம்பாட்டுத் துறைக்கான நிரந்தரச் செயலாளர் பொறுப்பையும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஏற்றுக்கொள்வார்.

தொடர்பு, தகவல் அமைச்சின் மேம்பாட்டுத் துறைக்கான நிரந்தரச் செயலாளராக உள்ள திரு சிங் காய் ஃபோங், அதே அமைச்சில் வேறொரு பொறுப்பான தகவல் மற்றும் மேம்பாட்டுக்கான நிரந்தரச் செயலாளராக நவம்பர் 1ஆம் தேதி முதல் செயல்படுவார்.

மேலும் திரு சிங், பிரதமர் அலுவகத்தில் மேம்பாட்டு மற்றும் இணையப் பாதுகாப்புத் துறைக்கும் நிரந்தரச் செயலாளராகவும் இருப்பார்.

குறிப்புச் சொற்கள்