சிரமமானதாகத் தோன்றியபோதிலும் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் நம்பிக்கை சிங்கப்பூருக்கு இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார்.
புவி வெப்பமடைதலைக் குறைக்கவும் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பருவநிலை மாற்ற மாநாடு (சிஓபி28) வழிகாட்டும் எனவும் திரு லீ செய்தியாளர்களிடம் கூறினார்.
புவியின் வெப்பத்தை 1.5 டிகிரி செல்சியசுக்குக் கட்டுப்படுத்தும் நடைமுறைக்கு பங்களிக்க சிங்கப்பூர் தன்னால் ஆனதைச் செய்யும் என்றார் அவர்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, கரிம வெளியீட்டைக் குறைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்றும் பிரதமர் லீ குறிப்பிட்டார்.
ஏற்கெனவே 2021 மற்றும் 2022 மாநாடுகளின்போதும் திருவாட்டி ஃபூ, கரிமச் சந்தைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான அமைச்சர்நிலை ஆலோசனைகளில் இணைந்து பணியாற்றினார்.
சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசுகள் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தின் முடிவில் திரு லீ, சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசினார்.
சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் எரிசக்தி உருமாற்றம் எந்த அளவுக்கு எளிதாக அல்லது கடினமாக இருக்கும் என்று திரு லீயிடம் கேட்கப்பட்டதற்கு மேற்கண்ட தகவல்களை அவர் பதிலாகக் கூறினார்.
சிஓபி28 மாநாட்டை துபாய் ஏற்று நடத்துகிறது. நவம்பர் 30 தொடங்கி டிசம்பர் 12 வரை அம்மாநாடு நடைபெற உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை பிரதமர் லீயும் அவரது பேராளர் குழுவும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தைச் சுற்றிப் பார்த்தது. ஐக்கிய அரசு சிற்றரசுகளுக்குச் சொந்தமானது அந்த எண்ணெய் நிறுவனம்.
அந்நிறுவனக் குழுமத்தின் தலைமை நிர்வாகியும் சிஓபி28ன் தலைவருமான சுல்தான் அல் ஜாபர், பிரதமர் லீக்கும் அவரது குழுவினருக்கும் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் எரிசக்தி உருமாற்றத் திட்டங்களை விளக்கினார்.
அது குறித்து செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட திரு லீ, ஐக்கிய அரபு சிற்றரசுகள் இயற்கை பெட்ரோகெமிக்கல், பெட்ரோலியம் மற்றும் எரிவாயு வளங்களைப் பெற கொடுத்து வைத்த நாடு.
“அதேநேரம் கரிமத்தைக் குறைக்க அவர்கள் ஆயத்தமாக வேண்டி உள்ளது. ஒட்டுமொத்த பொருளியல் கட்டமைப்பையும் மாற்றி அமைக்க வேண்டி இருப்பதால் இந்தப் பணி மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என்பதை இன்று காலை (ஞாயிறு) அபு தாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தில் பகிர்ந்துகொண்டேன்,” என்றார்.
அபுதாபி அருகே ஆகப்பெரிய எரிவாயு ஆலை ஒன்றைக் கட்டுவதற்கான US$16.9 பில்லியன் (S$23.2 பில்லியன்) குத்தகையை அந்நிறுவனம் இம்மாதத் தொடக்கத்தில் பெற்றது.
ஐக்கிய அரபு சிற்றரசை எரிவாயு தற்சார்புள்ள நாடாகத் தொடர இந்த எண்ணெய் நிறுவனம் கைகொடுக்கிறது. அத்துடன் அதன் எரிஎண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியின் அளவும் அதிகரிக்கிறது.