வொர்க் பர்மிட்டில் பொய்யான தகவல்

வொர்க் பர்மிட்டில் பொய்யான தகவல்

2 mins read
55a9dc49-7c85-446b-adf8-505fb83184c4
காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற வந்த ஹான் ஃபெய்ஸி பொது இடத்தில் கூச்சல் போட்டு, தாதியை தகாத வார்த்தைகளால் சாடினார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காவல்துறை அதிகாரிகளுடன் தான் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை படம்பிடித்து சமூக ஊடகத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சீனாவைச் சேர்ந்த மாது, அவரது வொர்க் பர்மிட் விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.

ஹான் ஃபெய்ஸி, 29, செயலராக வேலை செய்யப்போவதாக விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் சமூகத் தோழியாக பல்வேறு இடங்களில் செயல்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

வொர்க் பர்மிட் படிவத்தில் கேடிஎல் எலிமெண்ட்ஸ் என்ற நிறுவனம் தன்னைச் செயலர் வேலையில் அமர்த்தியிருப்பதாக ஆகஸ்ட் 11ஆம் தேதி அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிறுவனம், இரவு விடுதி, கரவோக்கே நிலையங்கள் போன்றவற்றை நடத்தி வருகிறது.

அவரது விண்ணப்பம், மனிதவள அமைச்சின் வொர்க் பர்மிட் பிரிவில் சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போது தடுப்புக் காவலில் உள்ள ஹானுக்கு கேடிஎல் எலிமெண்ட்ஸில் வேலை பார்க்கும் நோக்கமில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 11 வரை உரிய வொர்க் பர்மிட் அனுமதியில்லாமல் சமூகத் தோழியாக அவர் செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த அக்டோபர் 13ஆம் தேதி அவர் மீது ஆறு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. பொது இடத்தில் தொந்தரவு ஏற்படுத்தியது அவற்றில் ஒன்று. பொது ஊழியரை தகாத வார்த்தைகளால் அவமரியாதையாக பேசியது மற்றொரு குற்றச்சாட்டு.

அக்டோபர் 10ஆம் தேதி சிங்கப்பூர் பொது மருத்துவமனை அவசரப் பிரிவில் காயம் அடைந்த காலுக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த அவர் கூச்சல் போட்டு பொதுமக்களுக்கு தொந்தரவுகளை ஏற்படுத்தினார் என்றும் அங்கிருந்த ஒரு தாதியை தகாத வார்த்தைகளைக் கூறி அவர் அவமதித்தார் என்றும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அங்கு வந்த காவல்துறை அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

குறிப்புச் சொற்கள்