மின்சாரப் பயன்பாட்டை குறைப்போருக்கு வெகுமதி

மின்சாரப் பயன்பாட்டை குறைப்போருக்கு வெகுமதி

2 mins read
1975cd4d-e35d-41fd-92fc-ed6517717d0f
போட் கீ பகுதியில் குளிர்சாதனப் பெட்டியை பயன்படுத்தும் கட்டடங்கள். குளிர்சாதனப் பெட்டி பயன்பாடே பெரும்பகுதி மின்சாரப் பயன்பாடாக விளங்குகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

மின்சாரக் கட்டமைப்புக்கு இருக்கும் சுமையைக் குறைக்கும் முயற்சியாக விவேக மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள வீடுகள் தங்கள் மின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவி பெறுவர்.

இதுபோல் விவேக மீட்டர் பொருத்தப்பட்ட வீடுகளில் வசிப்போர் உச்சநேர மின்சாரப் பயன்பாடு உள்ள வேளைகளில் தங்கள் மின்சாரப் பயன்பாட்டை மற்ற நேரங்களில் மாற்றி வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுவர்.

‘ரெசிடன்ஷியல் டிமாண்ட் ரெஸ்போன்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் 2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகம் காணும். இதில், எஸ்பி குழுமம் வழங்கியுள்ள விவேக மின்சார மீட்டர்கள் பெற்றுள்ள கிட்டத்தட்ட 1,000 குடும்பங்கள் பங்கேற்கும். மேற்படி விவரங்களை எரிசக்தி சந்தை ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இத்திட்டத்தின்படி, திட்டத்தில் பங்குபெறும் குடும்பங்கள் மின்சாரப் பயன்பாடு உச்ச கதியில் இருக்கும்போது தங்கள் மின்சாரப் பயன்பாட்டை ஒத்திப்போடும்படி கேட்டுக்கொள்ளப்படுவர் அல்லது தற்காலிகமாக மின்சாரப் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுவர்.

இவ்வாறு கேட்டுக் கொள்ளப்படும்போது திட்டத்தில் பங்குபெறுவோர் துணி துவைக்கும் இயந்திரம், அல்லது பாத்திரங்கள் கழுவும் இயந்திரம் போன்ற தங்கள் உயர் மின்சாரப் பயன்பாட்டு தேவையை ஒத்திப்போடுவர் அல்லது தங்கள் குளிர்சாதனப் பெட்டியின் குளிரூட்டும் தன்மையைக் குறைத்துக்கொள்வர். இல்லையெனில் அதை அந்த நேரத்தில் செயலிழக்கச் செய்துவிடுவர்.

மின்சார உச்ச நேரப் பயன்பாடு பொதுவில் மதிய வேளையில் அல்லது வெப்பம் மிகுதியாக இருக்கும் மாதங்களில் ஏற்படும்.

உதாரணமாக, இவ்வாண்டு பிப்ரவரி மாதம் மின்சாரப் பயன்பாடு அதிக அளவில் 7.3 கிகவாட்ஸ் அளவுக்கும் மே மாதம் 7.9 கிகாவாட்ஸ் அளவிலும் இருந்தது. இது கிட்டத்தட்ட சராசரிப் பயன்பாட்டை விட 8 விழுக்காடு அதிக மின்சாரப் பயன்பாடு என்று கூறப்படுகிறது. இவ்வாண்டு மே மாதம் 13ஆம் தேதி, அங் மோ கியோவில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியசாக இருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

மின்சாரத் தேவை, விநியோகம் போன்றவை சரிவர கையாளப்படாவிட்டால், மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டு மின்சாரக் கட்டணம் பொதுவாக உயரும் சாத்தியம் ஏற்படுகிறது. இது மின்சார விநியோகக் கட்டமைப்புக்கு நெருக்குதலையும் ஏற்படுத்தும்.

வேண்டுகோளுக்கு இணங்க மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளும் குடும்பங்களுக்கு நிதி ஊக்குவிப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்