துவாஸில் சூரியத் தகடுகளைப் பொருத்திக் கொண்டிருந்த பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர் கூரையிலிருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் பிறகு இறந்துவிட்டார்.
பத்து மீட்டர் உயரத்திலிருந்து அந்த 36 வயது ஊழியர் தவறி விழுந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது. அப்போது கூரையில் சூரிய வெளிச்சம் நுழைவதற்கான சன்னலை அவர் பொருத்திக் கொண்டிருந்தார்.
துவாஸில் நிகழ்ந்த சம்பவம் குறித்து பிற்பகல் 2.35 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
ஞாயிற்றுக்கிழமை அன்று காயமடைந்த ஊழியர் உடனடியாக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் படுகாயம் அடைந்ததால் உயிர் பிழைக்கவில்லை.
இதற்கிடையே “உயர்வான இடத்தில் வேலை செய்யும்போது பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி ஊழியருக்கு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்,” என்று மனிதவள அமைச்சின் பேச்சாளர் ஒருவர் வலியுறுத்தியிருந்தார்.
எனர்ஜிடிக்ஸ் கட்டுமான நிறுவனத்துக்கு வேலையிடத்தில் உயரமான இடத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து வேலைகளையும் உடனடியாக நிறுத்த அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இறந்த ஊழியர், பிபிஜி எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தின் ஊழியராவார்.
ஊழியரின் உடலை அவரது குடும்பத்தினர் வாழும் பங்ளாதேஷ் நாட்டுக்கு அனுப்பிவைக்க பிபிஜி எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் ஏற்பாடுகளை செய்து வருவதாக வெளிநாட்டு ஊழியர் நிலையம் (எம்டபிள்யு) தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
அது மட்டுமல்லாமல் உயிரிழந்தவரின் நெருங்கிய குடும்பத்தினருக்கு எம்டபிள்யு நிதியுதவி செய்யவிருக்கிறது. ஆனால் எவ்வளவு தொகை என்பதை அது தெரிவிக்கவில்லை.
“நாங்கள் ஏற்கெனவே செய்ய வேண்டிய அவசர உதவி குறித்து மதிப்பிட்டு வருகிறோம்,” என்று எம்டபிள்யு நிர்வாக இயக்குநர் மைக்கல் லிம் கூறினார்.
ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்த சம்பவத்துடன் சேர்த்து 2023ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 21 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இவ்வாண்டு ஜனவரியிலிருந்து ஜூன் வரை 14 வேலையிட மரணச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில் மனிதவள அமைச்சு தெரிவித்தது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2020ல் 30, 2021ல் 37, 2022ல் 46 மரணச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.