மோசடிகளை தடுக்க சிங்கப்பூர் வங்கிகள் எடுத்த நடவடிக்கைகளால் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வாடிக்கையாளர்கள் $57.6 மில்லியன் இழப்பது தடுக்கப்பட்டுள்ளதாக வங்கித் துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், தீங்குநிரலுக்கு எதிராக அண்மையில் சிங்கப்பூர் வங்கிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் வாடிக்கையாளர்கள் மேலும் $18.6 மில்லியன் இழப்பது தடுக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
இது குறித்து சங்கம் விவரங்கள் எதுவும் வெளியிடவில்லை என்றபோதிலும், சங்கம், அதன் உறுப்பினர் வங்கிகள், அரசு மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள் ஆகியவை மோசடிகளுக்கு எதிராக அணுக்கமாக ஒத்துழைத்ததன் பலனாக இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக அது விளக்கியது.
மோசடிகளில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தாங்கள் இழந்த பணத்தை திரும்பப் பெற முடியுமா என்ற கேள்விக்கு, வங்கிகள் தங்கள் சொந்த விருப்புரிமையின்கீழ், நல்லெண்ண அடிப்படையில், மோசடிகளில் இழப்புகளை சந்தித்த வாடிக்கையாளர்கள் குற்றச்செயல்களின் முழு விளைவுகளுக்கு இலக்காகாமல் உதவி செய்து வருகின்றன என்றும் சங்கம் தெரிவித்தது.
ஒவ்வொரு மோசடி விவகாரத்திலும் வங்கிகள் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்லும் போக்கை கடைப்பிடிக்கும் என்றும் மோசடி எந்த அளவு நுட்பமானது, வாடிக்கையாளரின் நிதி நிலைமை ஆகியவற்றை வங்கிகள் கருத்தில்கொண்டு செயல்படும் என்றும் சங்கம் தெளிவுபடுத்தியது.
இதுபற்றிக் கருத்துரைத்த சங்கத்தின் இயக்குநர் ஓங் ஆங் அய் பூன், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை பாதுகாக்க கடப்பாடு கொண்டுள்ளன என்றும் இதில் பொதுமக்களும் விழிப்புடன் இருப்பது முக்கியம் என்றும் கூறினார்.
“மோசடிகளுக்கு எதிரான யுத்தம் முடிவில்லாதது. அதற்குத் தேவை, அதிகாரிகள், வங்கிகள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும்,” என்று திருவாட்டி ஓங் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களைக் குறிவைத்து மோசடிக்காரர்கள் அறிமுகப்படுத்தும் புதுப் புது நூதனமான திட்டங்களுக்கு எதிராக வங்கிகள் தொடர்ந்து எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்றும் சங்கம் உறுதி கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வங்கிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் வாடிக்கையாளர்கள் அசௌகரியத்தை எதிர்கொள்ளலாம். ஆனால், மின்னிலக்க வங்கிச் சேவையின் நம்பகத்தன்மையை கட்டிக்காக்க இவை தேவையானவை என்று அவர் மேலும் கூறினார்.

