குறைந்த வயதினருடன் பாலியல் சுகம் அனுபவிப்பது, ஆபாசக் காணொளி பார்ப்பது போன்ற தொல்லைகள் காரணமாக 43 வயது மருத்துவர் ஒருவர் தமது பிள்ளைகளைக் காணும் வாய்ப்பை இழந்துள்ளார். அதற்கான உத்தரவு செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டது.
அவரது முன்னாள் மனைவியின் கட்டுப்பாட்டில் உள்ள தம் 15 வயது மகளையும் 12 வயது மகனையும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் சென்று பார்ப்பதற்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு இருந்த உரிமை அந்த மருத்துவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. குறைந்த வயது சிறுமியருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது தொடர்பாக அந்த மருத்துவர் தமது நண்பருடன் பேசிய ஒலிப்பதிவை அவரது முன்னாள் மனைவி நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த ஒலிப்பதிவில் உள்ள உரையாடல் நகைச்சுவைக்காகப் பேசப்பட்டது என்ற மருத்துவரின் வாதத்தை நீதிபதி நிராகரித்தார்.

