தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்றாவது மின்கல மறுசுழற்சி தொழிற்சாலை

2 mins read
80b48bc5-b9d1-475b-af16-91237d13d8fb
கேஜிஎஸ் மின்கல மறுசுழற்சி தொழிற்சாலையை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்கல மறுசுழற்சிக்கான மூன்றாவது தொழிற்சாலை சிங்கப்பூரில் தொடங்கப்பட்டு உள்ளது.

துவாஸ் சவுத் லேனில் அமைந்துள்ள கேஜிஎஸ் எனப்படும் அந்தத் தொழிற்சாலையை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.

ஏற்கெனவே, இதைப்போன்ற இரு தொழிற்சாலைகள் இங்கு இயங்குகின்றன. துவாஸில் உள்ள டிஇஎஸ் சிங்கப்பூர், ஜூரோங்கில் உள்ள செக்யூர் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் ஆகியன அந்தத் தொழிற்சாலைகள்.

சிங்கப்பூரில் மின்கல மறுசுழற்சிக்கான தேவையில் 30 விழுக்காட்டை புதிய தொழிற்சாலை ஈடுகட்டும் என்று டாக்டர் கோர் தெரிவித்தார். தற்போது ஆண்டுக்கு 11,000 டன் என்ற அளவில் மறுசுழற்சி உள்ளது.

மின்சார வாகனங்களுக்கான மின்கலத் தேவை அதிகரிப்பதால் மறுசுழற்சி தொழிற்சாலை அவசியமானது என்றும் டாக்டர் கோர் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் நிலப்பரப்பில் தேங்கும் கழிவுகளை 2030ஆம் ஆண்டுக்குள் 30 விழுக்காடு குறைக்க சிங்கப்பூர் இலக்கு வகுத்து உள்ளது. அந்த இலக்கை அடைய மின்னணுக் கழிவு மறுசுழற்சியும் மின்கல மறுசுழற்சியும் முக்கியமானவை என்றார் அவர்.

திறக்கப்பட்டு உள்ள கேஜிஎஸ் தொழிற்சாலை 20,000 சதுர அடியில் அமைந்துள்ளது. தொழில் ஆர்வமிக்க மூவரால் 2016ஆம் ஆண்டு மின்னணுக் கழிவு மறுசுழற்சி நிறுவனமாகத் தொடங்கப்பட்ட இத்தொழிற்சாலை, இந்த ஆண்டு மின்கல மறுசுழற்சியில் காலடி எடுத்து வைத்து உள்ளது.

வர்த்தகரான டி மேக்ஸ், 33, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய ஜேஸ்பர் டான், 33, காகித மறுசுழற்சி நிறுவனத்தில் பணிபுரிந்த ஆண்ட்ரூ டான், 35, ஆகியோர் அம்மூவர்.

இந்தத் தொழிற்சாலையை ஏற்படுத்த கேஜிஎஸ் $2 மில்லியன் முதலீடு செய்துள்ளதாக டி மேக்ஸ் தெரிவித்தார்.

நாள் முழுவதும், அதாவது 24 மணி நேரமும் இயங்கினால் ஆண்டுக்கு ஏழு டன் மின்கலத்தைக் கையாளும் திறன்பெற்றது இந்நிறுவனம் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்