சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் ‘ஆர்டர் ஆஃப் தெமாசெக்’ எனும் ஆக உயரிய குடிமை விருதைப் பெறுகிறார்.
ஞாயிற்றுக்கிழமையன்று மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (ஐடிஇ காலேஜ் சென்ட்ரல்) தேசிய விருது நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அந்நிகழ்ச்சியில் தற்போது அதிபர் பதவி வகிக்கும் திரு தர்மன் சண்முகரத்னத்திடமிருந்து திருவாட்டி ஹலிமா விருதைப் பெறுவார்.
திருவாட்டி ஹலிமா, 2017ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டுவரை அதிபராகப் பதவி வகித்தார். சிங்கப்பூரின் முதல் பெண் அதிபரான அவர், இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி வரை அப்பொறுப்பில் இருந்தார். இரண்டாவது தவணைக் காலத்திற்கு அதிபராகப் பணியாற்ற அவர் விருப்பம் தெரிவிக்கவில்லை. இவ்வாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
அதிபர் தவணைக் காலம் நிறைவடைந்த பின்னர் திருவாட்டி ஹலிமா சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக் கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டார்.
அவர் தமது பதவிக் காலத்தில் பாலினச் சம உரிமை போன்ற விவகாரங்களுக்குக் குரல் கொடுத்தார். மூத்த ஊழியர்களைப் பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக விவகாரங்களின் தொடர்பில் வெளிப்படையாகப் பேசினார்.
சமயங்களுக்கிடையே உறவுகளை வளர்ப்பது, பல கலாசாரப் பின்னணிகளிலிருந்து வருவோரிடையே பேச்சுவார்த்தை நடத்துவது போன்றவற்றையும் திருவாட்டி ஹலிமா ஊக்குவித்து வருகிறார்.

