தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பணிப்பெண் மரணத்திற்கு காரணமானார்: கட்டாய சிகிச்சைக்குச் செல்ல உத்தரவு

2 mins read
2d8e578c-44b2-48dc-855d-bcd70623d880
முதியவர் 10வது மாடி வீட்டில் மெத்தைக்குத் தீ மூட்டியதன் காரணமாக 11வது மாடி வீட்டில் இல்லப் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த ஒரு பெண் மூச்சுத்திணறி இறந்துவிட்டார். - படம்: எஸ்டி

ஏற்ற இறக்க மனக் கிளர்ச்சிக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த முதியவர் ஒருவர், தனது படுக்கையில் தீ மூட்டிவிட்டார்.

மேல் வீட்டில் இல்லப் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த ஒரு பெண் அதன் காரணமாக மூச்சுத்திணறி இறந்துவிட்டார்.

அந்த ஆடவர், கட்டாயமாக மன சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

சியா ஜெக் யோங், 73 என்ற அந்த முதியவர் இரண்டு ஆண்டு காலம் கட்டாய சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். இல்லை எனில் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

சியா செய்த குற்றச் செயல்களுக்கும் அவரின் மனநிலைக்கும் தொடர்ப்பு இருப்பதாகத் தெரிகிறது என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

மூர்க்கமான செயல் மூலம் மரணத்தை ஏற்படுத்திவிட்டதாகக் கூறும் குற்றச்சாட்டின் பேரில் அந்த ஆடவர் ஆகஸ்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டு இருந்தார்.

சியா, புதன்கிழமை சக்கரநாற்காலியில் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

அவர், தெலுக் பிளாங்கா ரைஸ், புளோக் 39ன் 10வது மாடியில் ஒரு வீட்டில் குடி இருக்கிறார்.

சியா, 2022 ஜனவரி 29ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு விழித்துக்கொண்டார். படுக்கையில் மூட்டைப் பூச்சியோ வேறு ஏதோ இருந்ததாக நினைத்த அவர், பூச்சிகளைக் கொல்ல மருந்து அடித்தார். பிறகு தான் படுத்து இருந்த மெத்தையையே அவர் கொளுத்திவிட்டார்.

தீ பரவியது. அதை அணைக்க சியா முயன்றார். ஆனால் முடியவில்லை. அப்போது அவருடன் இதர நால்வரும் வீட்டில் தூங்கிகொண்டு இருந்தனர்.

ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அந்த முதியவர் வீட்டை விட்டு வெளியே போய்விட்டார். திடீரென்று அந்த நால்வரும் விழித்துக் கொண்டு நெருப்பைக் கண்டு பயந்து அவர்களும் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர்.

இதனிடையே, விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகளும் தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கப் போராடினர். என்றாலும் கரும் புகை கிளம்பி மேலே உள்ள வீடுகளுக்குப் பரவியது.

தீ அதிகாலை 6 மணிக்கு அணைக்கப்பட்டது. அதிகாரிகள் நேர் மேலே 11வது மாடி வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அந்த வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது.

பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்றனர். உள்ளே அடுப்பங்கறைக்கு அருகே இருந்த அறையில் திருவாட்டி கொய்மாதுன் அச்மாட் அலி என்ற இல்லப் பணிப்பெண் சுயநினைவு இழந்த நிலையில் கிடந்தார்.

அவரால் மூச்சுவிட முடியவில்லை. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் இரவு 10.30 மணிக்கு அந்த பணிப்பெண் இறந்துவிட்டார்.

சிறிது நேரம் கழித்து சியா கைதானார். இந்த விவரங்கள் நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்