சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து ரகசியமான முறையில் வெளியே தெரியாமல் மிகத் திறமையுடன் செயல்பட்டு வருகிறார்கள்.
அந்த அதிகாரிகளின் செயற்கரிய முயற்சிகளை அங்கீகரித்துச் சிறப்பிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை இரவு மில்லினியா தி ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் பிரத்தியேக நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் 75வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் வகையில் நடந்த அந்த நிகழ்ச்சியில், அந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிறப்பிக்கப்பட்டனர்.
பிரதமர் லீ சியன் லூங் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளைப் பெரிதும் பாராட்டினார்.
‘‘கடமைக்கும் அப்பாற்பட்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் அந்த அதிகாரிகள் பாடுபடுகிறார்கள். அவர்கள் படும் பாடு ஒரு சிறிய வட்டத்தைவிட்டு வெளியே ஒருபோதும் தெரியாது. அத்தகைய அதிகாரிகள் வெளியே தெரியாமல் செயல்படும் கதாநாயகர்கள்,’’ என்று பிரதமர் பாராட்டினார்.
இருந்தாலும் எப்போதாவது இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் அந்த அதிகாரிகளின் தொண்டுகளை நாம் சிறப்பிக்கிறோம் என்று திரு லீ கூறினார்.
மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரின் தொடக்கக் காலத்தில் இரண்டு பயங்கரவாதச் சம்பவங்களை முறியடித்ததில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தவர்களில் ஒருவரான திரு சராஜ் டின் என்ற உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை முன்னோடி அதிகாரியை திரு லீ சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்க அதிகாரிகள், அதிரடிப் படை வீரர்கள் அடங்கிய ஒரு குழுவில் அந்த அதிகாரி இடம்பெற்றிருந்தார்.
அந்தக் குழுவுக்கு அப்போதைய பாதுகாப்பு வேவுத்துறை இயக்குநர் எஸ். ஆர். நாதன் தலைமை வகித்தார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த நான்கு கடத்தல்காரர்கள் 1991ல் எஸ்கியூ117 விமானத்தை கடத்தி பலரையும் பிணையாக பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டினர்.
உருது தெரிந்த திரு சராஜ், வெற்றிகரமான முறையில் அந்தக் கடத்தல்காரர்களிடம் பேசினார்.
தந்திரமாக அவர்களிடம் பேசி விமானி அறைக்குள் அவர்கள் செல்லுமாறு செய்தார்.
அந்தச் சந்தர்ப்பதைப் பயன்படுத்திக்கொண்டு சிங்கப்பூர் ஆயுதப்படையைச் சேர்ந்த அதிரடிப்படை வீரர்கள் விமானத்துக்குள் புகுந்து கடத்தல்காரர்களை மடக்கினர்.
கடந்த 1980களில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையில் பணியாற்றிய ஒரு சில பெண் அதிகாரிகளில் ‘‘டைகர் லில்லி’’ என்பவரும் ஒருவர்.
இவர், ஜேஐ அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களின் துணைவியார்களுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொண்டார். அதன்மூலம் அந்தப் பயங்கரவாதக் குழுவின் சிங்கப்பூர் கட்டமைப்பைக் கண்டுபிடிப்பதில் முக்கிய பணியாற்றினார்.
அந்த மனைவியரின் கணவர்கள் திருந்தி புலன்விசாரணைகளில் உதவவும் டைகர் லில்லி உதவினார்.
பயங்கரவாத மிரட்டல் இப்போது புதிய வடிவில் பரிணமித்து இருக்கிறது. இதனால் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும் அதற்கேற்ப மாறி சிங்கப்பூரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று திரு லீ குறிப்பிட்டார்.
இதனிடையே, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குச் செய்தி அனுப்பிய சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம், சிங்கப்பூர் இன்று அனுபவிக்கும் இறையாண்மையும் நிலைப்பாடும் அதுவாக ஏற்பட்ட ஒன்று அல்ல என்று கூறினார்.
சிங்கப்பூரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மிக முக்கிய பணியாற்றி இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.