அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகச் சின்னம் கொண்ட போலிக் கடிதம்

அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகச் சின்னம் கொண்ட போலிக் கடிதம்

1 mins read
fe603d22-3e27-4db1-af0c-e8761bd0e487
அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்தின் சின்னத்தைக் கொண்ட போலிக் கடிதம். - படம்: அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம்

தங்களின் சின்னத்தையும் தங்கள் மூத்த அதிகாரி ஒருவரின் கையெழுத்தையும் கொண்டு பொதுமக்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று போலியானது என்று அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்தக் கடிதத்தைப் பெறுபவர், கள்ளப் பணத்தை நல்லப் பணமாக மாற்றும் செயலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் அதற்குத் தண்டனையாக அவர் மூன்றாம் தரப்பு வங்கிக் கணக்கு ஒன்றுக்குக் கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மூன்றாம் தரப்பு வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்புமாறு பொதுமக்களிடம் தாங்கள் கேட்பதில்லை என்று அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மேலும், கடிதத்தில் பல இலக்கணப் பிழைகள் இருக்கின்றன; இக்கடிதம் போலி என்பதை அத்தகைய அம்சங்கள் எடுத்துக்காட்டுவதாக அலுவலகம் சுட்டியது.

வெளிநாட்டில் வசிப்பவர் ஒருவருக்குப் போலிக் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. கட்டணத்தில் இந்தோனீசிய நாணயமான ருப்பியாவில் செலுத்துமாறும் கேட்கப்பட்டிருக்கிறது.

உலகளவில் சிங்கப்பூரர்கள்தான் மோசடிகளுக்கு ஆக அதிகத் தொகையைப் பறிகொடுப்பதாக சென்ற வாரம் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்ற மோசடித் தடுப்பு மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. மோசடிக்கு ஆளாகும் சிங்கப்பூரர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக 4,031 டாலரைப் (5,517 வெள்ளி) பறிகொடுக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்