கண்ணாகவும் காதாகவும் இருந்து செயல்படும் அதிகாரிகள்; பிரதமர் பாராட்டு

கண்ணாகவும் காதாகவும் இருந்து செயல்படும் அதிகாரிகள்; பிரதமர் பாராட்டு

3 mins read
21e6c140-32f8-4dcc-a4a0-f2d92a825d51
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் அதிகாரிகள் கடமைக்கு அப்பாலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி தங்களுடைய இலக்குகளைச் செய்து முடிக்கிறார்கள். அவர்கள் வெளியே தெரியாத கதாநாயகர்கள் என்று பிரதமர் லீ சியன் லூங் பாராட்டினார். - படம்: தொடர்பு தகவல் அமைச்சு 

நாடுகள் அனைத்துவகை மிரட்டல்களில் இருந்தும் தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். சிங்கப்பூர் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவருமே வாழ்த்துவார்கள் என்று நினைத்தால் அது ஏமாறக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.

சிங்கப்பூர் இரு முனைகளில் மிரட்டல்களை எதிர்நோக்குவதாக திரு லீ கூறினார்.

வெளிநாட்டு ஆதிக்கச் சக்திகள் சிங்கப்பூர் மீது குறி வைக்கக்கூடும் என்பது அவற்றில் ஒன்று.

அதேவேளையில், உள்நாட்டைப் பொறுத்தவரை எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலவரங்களையும் பிளவு தலைதூக்கக்கூடிய வாய்ப்புகளையும் திறமையாக சமாளிக்க வேண்டி இருக்கிறது என்று அவர் கூறினார்.

கடுமையாகப் பாடுபடும்படி மக்களுக்கு ஊக்கமூட்டி, பொதுவான ஒரு நோக்கத்திற்காக மக்களை ஐக்கியப்படுத்தும் மாபெரும் சிந்தனைகளுடன் கூடிய தலைவர்கள் ஒரு நாட்டிற்குத் தேவை என்றாலும் முன்னேற்றத்தையும் செழிப்பையும் சாதிக்க அது மட்டும் போதாது என்று திரு லீ குறிப்பிட்டார்.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் திரு லீ உரையாற்றினார்.

அந்த விருந்து நிகழ்ச்சி மில்லினியா ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் நடந்தது. அதில் முந்தைய, இப்போதைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நாட்டுக்கு ஏற்படக்கூடிய மிரட்டல்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டியது அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது. அத்தகைய மிரட்டல்களைத் திறம்பட கையாளும் நிலையிலும் அரசாங்கம் இருக்க வேண்டும் என்று திரு லீ தெரிவித்தார்.

அதிகாரிகளிடம் உரையாற்றிய திரு லீ, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை சரியான நேரத்தில் தகவல்களை அரசாங்கத்திற்குத் தெரிவிப்பதில் உயிர்நாடியாக பணியாற்றுகிறது என்றார்.

‘‘உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளான நீங்கள் நம்முடைய கண்களாவும் காதுகளாகவும் செயல்பட்டு பல்வேறு அமைப்புகளையும் கண்காணித்து வருகிறீர்கள். பல போக்குகளையும் விழிப்புடன் கண்காணித்து வருகிறீர்கள்.

‘‘பிரச்சினைகள் கடுமையாக ஆகும் என்று தெரியும்போது அவற்றை முளையிலேயே கிள்ளிவிடுகிறீர்கள்,’’ என்று திரு லீ அதிகாரிகளைப் பெரிதும் பாராட்டினார்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சிங்கப்பூரின் ஜனநாயக நடைமுறை வெற்றிகரமாக, முறையாகச் செயல்படுவதற்குத் தோதாக நாட்டை நீங்கள் பாதுகாக்கிறீர்கள் என்று திரு லீ குறிப்பிட்டார்.

சுதந்திரம் அடைந்தது முதலே பல்வேறு சமூகங்களுக்கும் இடையில் சிங்கப்பூர் நம்பிக்கையைப் பலப்படுத்தி வந்திருக்கிறது.

இருந்தாலும் அத்தகைய வேறுபாடுகள் முற்றிலும் அகன்றுவிட்டதாக நம்புவது விவேகமற்றதாகவே இருக்கும் என்று திரு லீ கூறினார்.

சீனா-அமெரிக்கா பதற்றம், மத்திய கிழக்கு வன்செயல், இஸ்ரேஸ்-ஹமாஸ் பிரச்சினை ஆகியவை வெவ்வேறான வயதினர் அல்லது சமயங்களைச் சேர்ந்த சிங்கப்பூரர்களிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன என்று திரு லீ குறிப்பிட்டார்.

பயங்கரவாத மிரட்டலும் சிங்கப்பூருக்கான ஒரு பாதுகாப்புப் பிரச்சினையாகத் தொடர்கிறது என்பதையும் அவர் சுட்டினார்.

புதிய வகை தீவிரவாத சித்தாந்தங்கள் தலையெடுப்பதையும் திரு லீ குறிப்பிட்டார்.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையை 1948ல் சிங்கப்பூர் சிறப்புப் பிரிவாக பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் தோற்றுவித்தது. அது முதல் இந்தத் துறை இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் ஆற்றல்மிக்க அமைப்பாக பரிணமித்து இருக்கிறது என்பதையும் திரு லீ சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இருக்கிறது என்ற தைரியத்தில் இரவு நேரத்தில் நாம் நிம்மதியாகத் தூங்குகிறோம் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்