பொங்கோல் பூங்காவில் அறுவரைத் தாக்கியதாக நம்பப்படுபவர் கைது

பொங்கோல் பூங்காவில் அறுவரைத் தாக்கியதாக நம்பப்படுபவர் கைது

1 mins read
79d9120b-d7aa-4a9c-95ae-e965c56f24a3
சம்பவத்தில் ஓர் 71 வயது ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். - படம்: ‌ஷின் மின் நாளிதழ்

பொங்கோல் பூங்காவில் ஒரு துப்புரவுப் பணியாளர் உட்பட அறுவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் 40 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுமக்களுக்குத் தொந்தரவு இழைத்ததன் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் பொங்கோல் பூங்காவில் திங்கட்கிழமை காலை ஒரு துப்புரவுப் பணியாளரையும் பூங்காவுக்கு வருகை தந்த ஐவரையும் தாக்கியதாக நம்பப்படுகிறது.

70 வயதைத் தாண்டிய துப்புரவுப் பணியாளருக்கும் சந்தேக நபருக்கும் இடையே பொதுக் கழிவறையில் சண்டை மூண்டதாகக் கூறப்படுகிறது. தனது பணிக்கு இடையூறு விளைக்காமல் இருக்குமாறு துப்புரவுப் பணியாளர் சந்தேக நபரிடம் கடுமையாகக் கூறியதைத் தொடர்ந்து சண்டை ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.

அதற்குப் பிறகு ஓர் 86 வயது ஆடவர் உட்பட பூங்காவுக்கு வருகை தந்த ஐவர் சண்டை சத்தம் கேட்டு அதை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனையடுத்து சந்தேக நபர் அவர்களையும் தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்தார். பூங்காவுக்கு வந்திருந்த மேலும் சிலர் உதவிக்கரம் நீட்டி சந்தேக நபரை அடக்கியதாகவும் அவர் கூறினார்.

இச்சம்பவம் குறித்து திங்கட்கிழமை காலை ஏழு மணியளவில் தங்களுக்குத் தகவல் வந்ததென ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தது.

71 வயது ஆடவர் ஒருவர் நினைவுள்ள நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் மேலும் மூவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்