தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனாவின் பால் மாவு பொருள்களுக்கு‘மெலமின்’ விதிமுறையிலிருந்து விலக்கு

1 mins read
f0df03b2-7058-4e0e-a923-5f30f567e98c
பால் மாவுப் பொருள் உற்பத்தியின்போது ஒவ்வொரு தொகுதியையும் சீன அதிகாரிகள் சோதனை நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும். - படம்: அன்பிளாஷ்

சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மாவுப் பொருள்கள் ‘மெலமின்’ தொடர்பான விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

ஆனால் நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து அதற்கு அவசியம் இல்லை.

சீன மாவுப் பொருள்களுக்கு மெலமைன் விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.

செயற்கையாக புரதச் சத்து அளவை கூட்டுவதற்காக சீனாவின் விநியோகிப்பாளர்கள் பால் மாவில் மெலமின் கலந்தனர். இதனால் சீனாவில் 300,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் நச்சால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து 2008ஆம் ஆண்டில் மெலமின் விதிமுறைகளை சிங்கப்பூர் அரசாங்கம் புகுத்தியது.

இந்த விதிமுறை விலக்கப்படுவதால் சீன அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பால் மாவு ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். மேலும் தயாரிப்பாளர்கள் மெலமின் கலப்பு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படும் பால் மாவுப் பொருள்களில் மெலமின் சோதனை நடத்தி அதற்குரிய சுகாதாரச் சான்றிதழ்களை சீன அதிகாரிகள் வழங்க வேண்டும்.

இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு விளக்கமளித்த சிங்கப்பூர் உணவு அமைப்பு, 2012ஆம் ஆண்டிலிருந்து சீன மாவுப் பொருள்களில் மெலமின் கண்டுபிடிக்கப்படாததால் அந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று கூறியது.

ஏன் இதற்கு முன் விலக்கு அளிக்கப்படவில்லை என்பது குறித்து அமைப்பு விளக்கம் கொடுக்கவில்லை.

“சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால், பால் மாவுப் பொருள்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்,” என்று அமைப்பு குறிப்பிட்டது.