மோசடிகளில் இருந்து அப்பாவிகளைக் காக்க மேலும் பலவற்றைச் செய்யலாம்: வல்லுநர்கள்

மோசடிகளில் இருந்து அப்பாவிகளைக் காக்க மேலும் பலவற்றைச் செய்யலாம்: வல்லுநர்கள்

2 mins read
269efa09-ea3b-458b-88c3-7524314e5be9
சிங்கப்பூரில் மோசடிகள் அதிகமாகி வரும் சூழலில் உத்தேச யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளது. - படம்: எஸ்டி கோப்புப்படம்

மோசடிகள் இடம்பெறும்போது அதற்கு நிதி நிறுவனங்களும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறும் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளது.

இது, மோசடி இழப்புகளுக்கு யார் பொறுப்பு என்பதைத் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடுகிறது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இருந்தாலும்கூட எளிதில் பாதிக்கப்படக்கூடிய வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கவும் கள்ளச் செயலி விவகாரத்தைச் சமாளிக்கவும் மேலும் பலவற்றைச் செய்ய முடியும் என்று அவர்கள் கூறினர்.

சிங்கப்பூர் நாணய ஆணையமும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் புதின்கிழமை ஓர் அறிவிப்பை வெளியிட்டன.

மோசடிகளில் சிக்கி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும்போது அதற்கு வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களும் தொலைத்தொடர்புச் சேவை வழங்கும் நிறுவனங்களும் நேரடி பொறுப்பு ஏற்பதைப் பலப்படுத்தும் வகையில் அந்த அமைப்புகள் அந்த யோசனையை வெளியிட்டன.

அதன் தொடர்பில் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

அதிக ஆபத்து உள்ள வங்கிச் செயல்பாடுகளுக்கான கட்டாய 12 மணி இடைவெளி நேரத்தை முதியோர், மனநிலை பிரச்சினை உள்ளோர் செய்யும் பரிவர்த்தனைக்கும் நீட்டிக்கலாம் என்று இணையப் பாதுகாப்பு வல்லுநர் ராஜூ செல்லம் தெரிவித்தார்.

இந்தப் பிரிவினர் மோசடிகளுக்கு எளிதில் ஆளாகக் கூடியவர்கள் என்பதை அவர் சுட்டினார்.

திரு செல்லம், சிங்கப்பூர் கணினிச் சங்கத்தின் இயந்திர மனித தொழில்நுட்ப நியதி, ஆளுமை அறிவமைப்பின் தலைமை ஆசிரியர் ஆவார்.

எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்காக அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் சிறப்புக் கணக்குகளை வங்கிகள் தொடங்கலாம் என்றும் அவர் யோசனை கூறினார்.

இயந்திர மனிதத் தொழில்நுட்பம், பகுப்பாய்வு செயலிகளைப் பயன்படுத்தி வெளிநாட்டு பரிவர்த்தனைகளையும் வங்கிகள் கண்காணிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

புதிய ஏற்பாடு பற்றி கருத்து கூறிய சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங், ஆணையங்கள் முன்வைத்து இருக்கும் யோசனை, சமநிலையான, பொறுப்புள்ள, வலுவான ஒன்று என்றார்.

என்றாலும் திரு யோங்கும் பாட்டாளிக் கட்சியின் தலைவியான திருவாட்டி சில்வியா லிம்மும், ஆணையங்கள் தெரிவித்துள்ள உத்தேச ஏற்பாட்டை, கள்ளச் செயலி மோசடி மிரட்டல்களை உள்ளடக்கும் வகையில் நீட்டிக்கலாம் என்றும் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்