ஆர்ச்சர்ட் சென்ட்ரல் கடைத்தொகுதிக்கு வெளியே குறைந்தது இரண்டு காகங்கள் பாதசாரிகளைத் தாக்குவது தெரியவந்துள்ளது.
இதன் தொடர்பில் வியாழக்கிழமை அங்கு சென்ற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் அங்கிருந்த ஒரு மணிநேரத்தில் கிட்டத்தட்ட 10 காகம் தொடர்பான தாக்குதல் சம்பவங்களைத் தாங்கள் கண்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அங்கிருக்கும் சாலைப் பெயர்ப்பலகைகளிலிருந்து பறந்துவரும் காகங்கள் பாதசாரிகளின் தோள்களில் அமர்ந்து கழுத்தையும் காதுகளையும் கொத்துவதைப் பார்க்க முடிந்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் தாக்குதலுக்கு பின் அவை கடைத்தொகுதிக்கு வெளியே, மின்படிக்கட்டுக்கு அருகே, அமைந்துள்ள ஒரு குறிப்பிட்ட மரத்துக்கு திரும்பிச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் காகங்கள் ஏதுமறியா வண்ணம் அந்த மரத்துக்கு அருகே செல்லும் ஆடவர்களைத் தாக்குகின்றன. இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஓர் ஆடவர் காதில் ரத்தம் கசிய செல்வது காணப்பட்டது. எனினும், காகங்கள் மாதர்களைத் தாக்கவில்லை என்று கூறப்படுகிறது.
திருவாட்டி கிம் சூ என்ற 53 வயது மாது செவ்வாய்க்கிழமையன்று காகங்கள் பாதசாரிகள் தாக்கப்படுவதைப் படம் பிடித்து பின்னர் அவற்றை ஸ்டோம்ப் இணையத்தளத்திற்கு அனுப்பினார்.
“காகங்கள் திறந்தவெளி நடைபாதையில் செல்பவர்களை மட்டுமே தாக்கியதால் நான் மேற்கூறையுள்ள பகுதியில் நின்றிருந்தேன்,” என்று விளக்கினார்.
“ஒருவர் காதிலிருந்து ரத்தம் கசிவதைப் பார்த்தபின் நான் படம்பிடிக்க முடிவு செய்தேன்,” என்று இவர் கூறுகிறார்.