ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை முறைக்கு இன்னமும் மாறிக்கொள்ளாத உணவு நிலைய ஸ்டால்கடைக்காரர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம் இருக்கிறது.
அவர்கள் மானியத்தின் உதவியுடன் அந்த முறைக்கு மாறிக்கொள்ளலாம்.
சிங்கப்பூர் உடனடி பரிவர்த்தனை குறியீட்டுத் தளம் (எஸ்ஜிகியூஆர்) ஏற்பாட்டின்கீழ், கியூஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தும்போது ஒவ்வொரு மின்னிலக்க பரிவர்த்தனைக்கும் ஸ்டால்கடைக்காரர்கள் செலுத்த வேண்டிய 0.5% கழிவுத்தொகை தள்ளுபடி செய்யப்படும். இந்த வடிவில் அவர்களுக்கு அரசு மானியம் கிடைக்கும்.
‘‘மின்னிலக்கமயமாகும் உணவங்காடிக் கடைக்காரர்கள்’’ என்ற செயல்திட்டத்தின்கீழ் அந்தப் புதிய மானியம் கொடுக்கப்படுகிறது.
மேலும் பல உணவங்காடி கடைக்காரர்கள் மின்னிலக்கமயத்திற்கு மாறிக்கொள்வதற்கான காலக்கெடு 2024 டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இத்துடன் இந்தக் காலக்கெடு இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்னிலக்கமய இயக்கத்தை 2018ல் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தொடங்கி வைத்தது.
அது முதல் 11,000 உணவங்காடி கடைக்காரர்கள் இதில் பதிந்து இருக்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ், வியாழக்கிழமை புளோக் 216 பிடோக் உணவு நிலையச் சந்தைக்கு வருகை அளித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
அரசாங்க அமைப்புகள் நிர்வகித்து நடத்தும் உணவு நிலையங்களில் 18,000 ஸ்டால் கடைக்காரர்கள் தொழில் நடத்துகிறார்கள். அவர்களில் கூடுமான வரை பலரையும் மின்னிலக்கமயப்படுத்துவது இந்த இயக்கத்தின் நோக்கம் என்று திரு டான் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது தெரிவித்தார்.
இதனிடையே, மின்னிலக்கமயம் தங்களுக்கு மிகவும் வசதியாக இருப்பதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர் என்று அவர் கூறினார்.
எஸ்ஜிகியூஆர் தளம் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மொத்தம் $45 மில்லியன் மதிப்புள்ள சுமார் 5.4 மில்லியன் பரிவர்த்தனைகள் நடந்து இருக்கின்றன.
மின்னிலக்கமய மானியம் திட்டம் முதன்முதலாக 2020 ஜூன் மாதம் நீட்டிக்கப்பட்டது. அப்போது நடந்த பரிவர்த்தனை தொகையுடன் ஒப்பிடும்போது இந்தத் தொகை 15 மடங்கிற்கும் அதிகமானதாகும் என்று திரு டான் சொன்னார்.
மோசடிகள் அதிகமாகி வருவதால் மின்னிலக்கமய பரிவர்த்தனைகளில் நம்பிக்கை குறைந்து இருக்கிறதா என்று கேட்டதற்குப் பதிலளித்த அமைச்சர், அத்தகைய கவலைகளைப் போக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறினார்.
உணவங்காடி கடைக்காரர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வழிகாட்டி உதவுவதற்காக தூதுவர்கள் பணியில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

