மரபுடைமைத் திட்டங்களை வழிநடத்த இளையர்களுக்குப் புதிய மானியம்

மரபுடைமைத் திட்டங்களை வழிநடத்த இளையர்களுக்குப் புதிய மானியம்

2 mins read
fb6222e0-de72-455b-bb84-7d5d61e0d13f
(இடமிருந்து) தேசிய மரபுடைமைக் கழகத்தின் இளையர் குழு உறுப்பினர் இங் வீ லியாங், கழகத்தின் துணைத் தலைமை நிர்வாகி ஆல்வின் டான், குழு உறுப்பினர் பீபி பாங் ஆகியோர் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்ற மானியத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.  - படம்: சாவ்பாவ்

புதிய கண்காட்சி, சுற்றுலா, விரிவுரை, பயிலரங்குகள் போன்ற நடவடிக்கைகளை நடத்தி மரபுடைமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பும் இளையர்களுக்கு தேசிய மரபுடைமைக் கழகத்தின் இளையர் குழு புதிய நிதியம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.

‘யங் சேஞ்ச்மேக்கர்ஸ்-யூத் ஹெரிட்டேஜ் கிக்ஸ்டார்ட்டர் ஃபண்ட்’ என்ற அந்த நிதியம், தேசிய இளையர் மன்றத்தின் ‘வைசிஎம்’ எனப்படும் இளம் மாற்றுநர்கள் மானியத்தில் அங்கம் வகிக்கிறது.

வருங்கால மரபுடைமை ஆர்வலர்களை உருவாக்குவது, சமூகத்திற்குப் பயன்தரும் மரபுடைமை திட்டங்களைச் செயல்படுத்துவது உள்ளிட்ட இலக்குகளை ஆதரிப்பது இந்தத் திட்டத்தின் நோக்கம்.

சிங்கப்பூரின் மரபுடைமைச் சூழல் அமைப்பின் நிலைத்தன்மைக்கும் துடிப்புக்கும் பங்காற்ற இளையர்களை ஊக்குவிக்க விரும்புவதாக தேசிய மரபுடைமைக் கழகம் வியாழக்கிழமை சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் நடத்திய கலந்துரையாடலின்போது குறிப்பிட்டது.

இந்த மானியத்தின் மூலம் சிங்கப்பூர் மரபின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளையர்களுக்கு மேலும் அதிக பங்களிப்பை அனுமதிக்கும் கழகத்தின் கொள்கை மற்றும் சமூகப் பிரிவின் துணைத் தலைமை நிர்வாகி ஆல்வின் டான் தெரிவித்தார்.

15 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட ஆர்வமுள்ள இளையர்கள் ‘அவர்எஸ்ஜி கிராண்ட்ஸ் போர்ட்டல்’ தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வெற்றிகரமாக விண்ணப்பிப்பவர்கள் 80 விழுக்காடு வரையிலான (அதிகபட்சமாக $7,000) நிதியைப் பெறுவர்.

அத்துடன், ஆர்வமுள்ள இளையர்கள் தங்கள் தொடர்பு வட்டத்தை விரிவுபடுத்துவதற்கும் வழிகாட்டுதல் பெறுவதற்குமான வாய்ப்புகளை கழகமும் தேசிய இளையர் மன்றமும் ஏற்பாடு செய்கின்றன.

இவ்வாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை கழகத்தின் இளையர் குழு நடத்திய கருத்தாய்வுகளின் முடிவுகளை அடுத்து இந்த நிதியம் அமைக்கப்பட்டுள்ளது. மரபுடைமை தொடர்பான நடவடிக்கைகளுக்கு தொண்டூழியம் புரிவதன் மூலமும் பணித்திட்டங்களை மேம்படுத்துவதன் மூலமும் மரபுடைமை சார்ந்த நடவடிக்கைகளில் பங்கேற்க இசைவதாக கருத்தாய்வில் கலந்துகொண்டவர்களில் பத்தில் அறுவர் கூறினர்.

கருத்தாய்வின் மற்ற முடிவுகள், அடுத்தாண்டு கழகம் முதன்முதலாக வெளியிடும் இளையர் மரபுடைமை வரைவுத்திட்டத்தில் இடம்பெறும் எனக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்