உள்ளூர் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கும் திட்டத்தின் ஓர் அம்சமாக, ஃபேர்பிரைஸ் குழுமம் $2.9 மில்லியனை ஒதுக்கியுள்ளது.
விவோசிட்டியில் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் அறிமுகம் கண்ட 12வது சிங்கப்பூர் உற்பத்தி விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த விழா அனைத்து ஃபேர்பிரைஸ் கடைகளிலிம் ஃபேர்பிரைஸ் இணையத்தளத்திலும் நவம்பர் மாதம் 8ஆம் தேதிவரை நடைபெறும்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவிற்கு ஃபேர்பிரைஸ் குழுமமும் சிங்கப்பூர் உணவு முகமையும் ஏற்பாடு செய்துள்ளன. உள்ளூர் விவசாயிகளும் உற்பத்தியாளர்களும் தங்கள் பொருள்களை காட்சிக்கு வைக்கும் வாய்ப்பை இந்த விழா அளிக்கிறது.
உள்ளூர் சிறிய, நடுத்தர விநியோகிப்பாளர்கள் அதிகரித்துவரும் தங்கள் வர்த்தக செலவினத்தை சமாளிக்கும் விதத்தில் அந்நிறுவனங்களின் ஆதரவு, வளர்ச்சி திட்டத்தின் ஓர் அங்கமாக ஃபேர்பிரைஸ் பேரங்காடி இதை ஏற்று நடத்துகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் வரும் வர்த்தகங்கள், ரொக்கக் கையிருப்பை சமாளிக்க வகுக்கப்பட்டுள்ள மாற்றி அமைக்கப்பட்ட பணப்பட்டுவாடா முறை, தங்கள் பொருள்களை விற்கத் தேவையான சந்தைப்படுத்துதல் ஆதரவு போன்றவற்றைப் பெறலாம்.
கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் தற்பொழுது 500க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர வர்த்தகங்கள் பயன்பெறுகின்றன.
இந்தத் திட்டத்தில் பங்குபெற விரும்பும் நிறுவனங்கள் சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அவற்றில் ஒன்று, இந்த நிறுவனங்களின் ஆண்டு பணப் புழக்கம் $8 மில்லியன் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
இதுநாள்வரை, ஃபேர்பிரைஸ் குழுமம் அதன் சிறிய, நடுத்தர வர்த்தக பங்காளித்துவ நிறுவனங்களுக்கு உதவ $18 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது.
இதுபற்றிக் கருத்துரைத்த ஃபேர்பிரைஸ் குழும சில்லறை வர்த்தகப் பிரிவின் தலைமை நிர்வாகி இலேய்ன் ஹெங், “சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மைமிக்க உணவுக் கலாசாரத்தை உருவாக்க எங்களுடன் பணிபுரியும் உள்ளூர் விவசாயிகளே அடித்தளம்,” என்று கூறினார்.

