விமானங்களுக்கு அருகே மோட்டார்சைக்கிள் மீது மோதிய டாக்சி

1 mins read
7384130c-2cdd-423a-9a52-b6761e0d3756
மற்றொரு காரில் உள்ள கண்காணிப்புக் கருவியில் பதிவான காணொளி, மோட்டார்சைக்கிளை நீல நிற டாக்சி மோதுவதற்கு முன்னால் உள்ள நிலவரத்தைக் காட்டுகிறது. - படம்: எஸ்ஜி ரோடு விஜிலாண்டே/ஃபேஸ்புக்

தீவு விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமை பின்னாலில் இருந்து டாக்சி ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதிய விபத்தில் 73 வயது ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சாங்கி விமான நிலையத்தை நோக்கிச்செல்லும் தீவு விரைவுச்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து பிற்பகல் 2.20 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.

‘எஸ்ஜி ரோடு விஜிலாண்டே’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி, விரைவுச்சாலையின் இடது தடத்தில் நீல நிற டாக்சி ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியதைக் காட்டியது.

விரைவுச்சாலைக்குப் பக்கத்தில் சாங்கி விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

விபத்தின் காரணமாக மோட்டார்சைக்கிளின் சிதைவுகள் சாலையில் சிதறிக் கிடந்தன. மோட்டார்சைக்கிளை மோதிய பிறகு, விரைவுச்சாலையின் இரு தடங்களுக்கு மாறி மாறி அந்த டாக்சி நின்றது.

சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது மோட்டார்சைக்கிளோட்டி சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை கூறியது.

இந்த விபத்து தொடர்பில் 58 வயது ஆண் டாக்சி ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்