ஏட்டுக் கல்வி, தொழில் கல்வி ஊழியர்களுக்கு இடையிலான ஊதிய இடைவெளி குறைக்கப்படும். சீரமைக்கப்பட்ட பயிற்சி, வாழ்க்கைத்தொழில் திட்டம் வழி இது சாதிக்கப்படும்.
அதேவேளையில், தொழில்நுட்பக் கல்விக் கழக பட்டதாரிகள் தங்கள் வாழ்க்கைத்தொழிலில் முன்னதாகவே தேர்ச்சிகளை மேம்படுத்திக் கொள்ள உதவி கிடைக்கும்.
சிங்கப்பூரில் ஊழியர்கள் பார்க்கும் ஒவ்வொரு வேலையும் உயர்வாக மதிக்கப்படுகிறது; ஒவ்வொரு வேலைக்கும் நியாயமான அளவுக்கு வெகுமதி கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளில் இவை உள்ளடங்கும்.
இவற்றோடு, பட்டப்படிப்புக்குப் பிறகும் வாழ்நாள் முழுவதும் கற்கும் கலாசாரம் வலுவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னேறும் சிங்கப்பூர் உத்தி இயக்கத்தின் அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
வேலை, கல்வி ஆகிய துறைக்கான பரந்த அளவிலான திட்டங்கள் அதில் இடம்பெற்று இருக்கின்றன.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், தொழில்துறைச் சங்கங்கள், உயர்கல்வி நிலையங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து செயல்பட்டு அரசாங்கம் இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்.
குழாய்ப் பதிப்பு வேலை செய்பவர்கள், மின்சார வேலை செய்பவர்கள், சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்கள், முதியோர் பராமரிப்புத் துறை ஊழியர்கள் முதலானோர் இந்தச் சம்பள ஊக்குவிப்புத் திட்டத்தின்மூலம் பயனடையக்கூடியவர்களில் உள்ளடங்குவர்.
தொடர்புடைய செய்திகள்
பல வேலைகளுக்கும் இடையில் நிலவக்கூடிய சம்பள ஏற்றத்தாழ்வைக் குறைக்க நாம் மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்திக் கூறியது.
தொழில்நுட்பக் கல்விக்கழக பட்டதாரிகள் தேர்ச்சிகளை மேம்படுத்திக் கொண்டு புதுப்புது தேர்ச்சிகளைக் கற்றுக்கொண்டால் சம்பள இடைவெளியைக் குறைத்துவிட முடியும் என்பதை அறிக்கை சுட்டிக்காட்டியது.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் படிக்கும் இளையர்கள் பட்டயப் படிப்பை முடிக்க ஆகும் செலவைச் சமாளிக்க எப்படி உதவலாம் என்பது பற்றி ஆராயப்படும் என்றும் அறிக்கை தெரிவித்தது.
அவர்கள் பட்டம் பெற்றதும் அவர்களின் மத்திய சேம நிதியில் பணத்தைப் போட்டு வீடு வாங்க அல்லது ஓய்வு காலத்திற்குச் சேமிக்க உதவலாம் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
தொழில்நுட்பக் கல்விக் கழக பட்டதாரிகள் ஒருபுறம் இருக்க, அரசு உதவி பெறும் தொழிற்கல்வி நிலையங்களில் பட்டயப் படிப்பு அல்லது அதற்கும் அதிக தகுதியை ஏற்கெனவே பெற்றிருப்போர் வேறொரு பட்டயச் சான்றிதழைப் பெற உதவியும் கிடைக்கும்.

