மூத்தோரின் ஓய்வுக்காலத் திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக கூடுதலான மூத்தோர் நடமாட்ட நிலையங்கள் அமைய உள்ளன.
மூத்த வயதில் அதிகமான உதவிகளை அவர்கள் பெறும் பொருட்டு அதற்கான புதிய திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.
சிங்கப்பூர் முழுவதும் குடியிருப்பு வட்டாரங்களில் மூத்தோரின் வசதிக்கேற்ற உள்கட்டமைப்புகளுடன் மூத்தோர் நடமாட்ட நிலையங்களைக் கட்ட அத்திட்டம் வழிவகுக்கிறது.
ஓய்வுக்காலத்திற்கான அடிப்படை நிதித் தேவைகளைப் பெறுவதில் மூத்தோருக்குக் கைகொடுக்க நடப்பில் உள்ள திட்டங்களுக்கும் ஊக்கம் பெற உள்ளன.
வேலைநலன் வருவாய் உதவித் திட்டம், மூத்தோர் ஆதரவுத் திட்டம், ஓய்வுக்கால சேமிப்புக்கான இணை ஆதரவுத் திட்டம் போன்ற அந்தத் திட்டங்கள்.
‘முன்னேறும் சிங்கப்பூர்’ இயக்கம் இவற்றை விளக்கி வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டது.
“மேலும் அதிகமான தாதிமை இல்லங்கள், மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றைக் கட்டுவதோடு இல்லப் பராமரிப்பு சேவைகளின் அளவை அதிகப்படுத்துவதன் மூலம் மூத்தோர் பராமரிப்பு உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தி வருவதாக அரசாங்கம் கூறினாலும் அவை போதாது.
“சமூகத்தில் மூத்தோர் தனித்துவிடப்படக்கூடிய ஆபத்துகளைக் குறைப்பதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துவது அவசியம். வாழ்க்கையின் எஞ்சிய காலப் பகுதியை சிறந்த உடல்நலனுடன் மூத்தோர் கழிப்பதற்கான சிறந்த வழிமுறைகளில் இதுவும் ஒன்று.
தொடர்புடைய செய்திகள்
“குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து வாழும் அதேநேரம் சமூக நடவடிக்கைகளிலும் உடற்பயிற்களிலும் மூத்தோர் ஈடுபடும்போது அவர்கள் பலவீனமடைவதும் உடல்நலன் குறைவதும் தள்ளிப்போகிறது.
சிங்கப்பூரில் தற்போதைய மக்கள்தொகையில் ஐந்து சிங்கப்பூரர்களில் ஒருவர் 65 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினராக உள்ளார். இந்த விகிதம் 2030ஆம் ஆண்டுவாக்கில் நால்வரில் ஒருவர் என்று அதிகரிக்கக்கூடும்.

