‘தொண்டூழியர்களின் சேவைசிங்கப்பூர் ஆயுதப் படைக்கு அவசியம்’

‘தொண்டூழியர்களின் சேவைசிங்கப்பூர் ஆயுதப் படைக்கு அவசியம்’

2 mins read
98fac202-3e67-4ea7-b394-65ab8e74c5ee
வழக்கறிஞர் கலா ஆனந்தராஜா, சிங்கப்பூர் ஆயுதப் படையில் வீரர்களின் பாதுகாப்பை மேம்படுத்த உதவி வருகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வேலையிடச் சுகாதார, பாதுகாப்புச் சட்ட நிபுணரான கலா ஆனந்தராஜா, தற்காப்பு அமைச்சில் ராணுவ வீரர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக தொண்டூழியம் செய்து வருகிறார். சமூகத்திற்கு திருப்பியளிக்க இதுவே அர்த்தமுள்ள வழி என்று 16 வயது மகனின் தாயாரான அவர் நம்புகிறார்.

கடந்த 2017ஆம் ஆண்டில் சிங்கப்பூர் ஆயுதப் படையின் பாதுகாப்பு மீதான இரண்டாவது வெளிப்புற மறுஆய்வுக் குழுவில் (இஆர்பிஎஸ்எஸ்) வழக்கறிஞரான அவர் சேர்ந்தார்.

இதற்கு சில நாள்களுக்கு முன்புதான் பயோனிக்ஸ் பீரங்கி வாகனம் பின்பக்கமாக நகர்ந்து லேண்ட் ரோவர் மீது மோதியதில் 22 வயது முழு நேர தேசிய சேவையாளர் மரணமடைந்தார்.

அதிலிருந்து வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக பல்வேறு புதிய நடவடிக்கைகளுக்கு கலா ஆனந்தராஜா உதவி செய்து வருகிறார். பீரங்கி போன்ற வாகனங்களில் பின்பக்கம் பார்க்கக்கூடிய படக்கருவிகளைப் பயன்படுத்துவது, ஓட்டுநருக்கும் வாகனத்தின் பின்னால் நின்றுகொண்டிருக்கும் வீரருக்கும் இடையே தொடர்பு முறை இருப்பது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களில் அவர் உதவியிருக்கிறார்.

அவரது சேவையை பாராட்டும் வகையில் வியாழக்கிழமை இரவு குட்வுட் பார்க் ஹோட்டலில் நடைபெற்ற தற்காப்பு அமைச்சின் தொண்டூழியர் விருந்து நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார்.

அவருடன் 38 அமைப்புகளைச் சேர்ந்த 362 தொண்டூழியர்கள் பாராட்டப்பட்டனர்.

குடிமைத் தொண்டூழியர்கள் பல்வேறு அம்சங்களில் பங்காற்றி வருவதால் பொதுமக்களுக்கு சிங்கப்பூர் ஆயுதப் படையால் உறுதியையும் உத்தரவாதத்தையும் வழங்க முடிகிறது. குறிப்பாக தேசிய சேவை மூலம் வீரர்கள் பெருமளவில் திரட்டப்படும் சிங்கப்பூர் ஆயுதப் படை போன்ற கட்டாய ராணுவத்துக்கு இது மிக அவசியம் என்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் தெரிவித்தார்.

சிங்கப்பூர் ஆயுதப் படையில் திட்டமிடல், அன்றாடப் பணிகள், பொறுப்புகள் போன்ற அனைத்து அம்சங்களிலும் தொண்டூழியர்களின் அதிக பங்களிப்பு தேவைப்படுகிறது என்று அமைச்சர் இங் குறிப்பிட்டார்.

வீரர்களின் பாதுகாப்பை எப்படி வலுப்படுத்துவது என்பதை சிங்கப்பூர் ஆயுதப் படையே தீர்மானிப்பதற்குப் பதிலாக இஆர்பிஎஸ்எஸ் என்ற வெளிப்புற மறு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வீரர்களின் பாதுகாப்பு மேம்பட தொண்டூழியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர் என்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார்.
வீரர்களின் பாதுகாப்பு மேம்பட தொண்டூழியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர் என்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்