ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம்: 2024 முதல் பாலர்பள்ளிகளுக்கு விடுமுறை நாள்கள்

2 mins read
f9e6b67c-1d08-49e0-8f7e-8dd1ef0d750a
பாலர் பள்ளிகள் இப்போது ஆண்டுதோறும் ஆறு நாள்களுக்கு மூடப்படுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 2024 முதல் பாலர் பள்ளிகளுக்கு கூடுதலாக இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்படும்.

ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம் ஆகிய இரண்டு நாள்களும் அந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை நாள்களாக இருக்கும்.

பாடத்திட்டத்திற்குத் திட்டமிடுவது, ஊழியர் பயிற்சி போன்ற பள்ளிக்கூட நடவடிக்கைகளுக்காக ஆண்டுதோறும் பாலர் பள்ளிகள் ஆறு நாள்கள் மூடப்படுகின்றன.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி வெள்ளிக்கிழமை இதனை அறிவித்தார்.

பாலர் பள்ளி ஆசிரியர்களின் நல்வாழ்வு, மேம்பாடு ஆகியவற்றுக்கு ஆதரவு அளிக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சன்டெக் சிட்டி சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி மையத்தில் நடந்த பாலர் பருவ கொண்டாட்டங்கள், மாநாடு என்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பாலர் பள்ளி ஆசிரியர்கள் தங்களுடைய வகுப்பு, பராமரிப்புப் பணிகளை முடித்த பிறகு ஓய்வாக இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அந்த நேரத்தில் அவர்கள் சாப்பிட ஓய்வு எடுக்க, புது தெம்புடன் பணியைத் தொடங்க ஆயத்தமாக நேரம் கிடைக்கும் என்று அவர் விளக்கினார்.

மூன்று வயது பிள்ளைகளையும் அதற்குக் குறைவான வயதுள்ள பிள்ளைகளையும் பராமரிக்கும் ஆசிரியர்களுக்கு மேலும் ஆதரவு அளிக்கும் வகையில், பாலர் பருவ மேம்பாட்டு முகவை அமைப்பு வெள்ளிக்கிழமை புதிய செயல்திட்டம் ஒன்றைத் தொடங்கியது.

பாலர் பருவ மேம்பாட்டு ஏற்பாடு 2023 என்ற அந்தச் செயல்திட்டம், 2011ல் முதன் முதலாகத் தொடங்கப்பட்ட திட்டத்தின் மேம்பட்ட வடிவமாகும்.

கல்வி போதனையின் தரத்தை மேம்படுத்துவதற்கான தனது முயற்சிகளின் ஒரு பகுதியாக 2024 இறுதி வாக்கில் தரமிக்க போதனை சாதனம் ஒன்றை இந்த முகவை உருவாக்கி வருகிறது.

குறிப்புச் சொற்கள்