குடமுழுக்கு கண்ட ஜூரோங் ஈஸ்ட் அருள்மிகு முருகன் கோயில்

குடமுழுக்கு கண்ட ஜூரோங் ஈஸ்ட் அருள்மிகு முருகன் கோயில்

2 mins read
1a3ac2d7-894f-497a-a01f-5083577f08cb
ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்திலுள்ள அருள்மிகு முருகன் கோயில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு கண்டது. - படம்: தினேஷ் குமார்

ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்திலுள்ள அருள்மிகு முருகன் கோயில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு கண்டது. கோலாகலமாக நடைபெற்ற இக்குடமுழுக்கு நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

காலை 6 மணி முதலே பக்தர்கள் வந்து குவிந்த நிலையில் 8 மணியளவில் கடப் புறப்பாடு தொடங்கியது. பக்தர்கள் ‘ஓம் முருகா’ என்று கோஷமிட்டு வந்த சூழலில்  காலை 8.35 மணியளவில் பிரதான முருகன் சன்னதி ராஜகோபுரத்தின் ஐந்து கலசங்கள் உட்பட கோயிலின் அனைத்து சன்னதிகளின் கோபுரக் கலசங்களுக்கும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. 

பின் தெய்வங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் வரிசையில் நின்று கோயிலுக்குள் சென்று தரிசனம் மேற்கொண்டனர்.

இக்குடமுழுக்கு நிகழ்விற்கு நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.  

பக்தர்கள் வசதியாக அமர்வதற்கு நாற்காலிகள், அன்னதானம், குடிநீர் விநியோகம், கோபுரத்திலும் கோயிலின் உட்புறத்திலும் நடப்பவற்றைப் பக்தர்கள் காண வசதியாக கோயிலின் முகப்பில் எல்இடி திரையில் நேரடிக் காட்சி, கூட்ட நெரிசல் கட்டுப்பாடு போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

இக்குடமுழுக்கு நிகழ்வில் கலந்துகொண்ட இல்லத்தரசியான வீனா மகேந்திரகுமார், 49, “அதிகாலை 5.30 மணிக்கே வந்துவிட்டோம். குடமுழுக்கினை நேரில் காண்பது கோடி புண்ணியம் என்பார்கள். இன்று அதனை கண்டது என் இன்னல்கள் அனைத்தும் அகன்று இனி நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது,” என்று உணர்ச்சிப்பொங்க கூறினார். 

தன் மனைவியுடனும் மகளுடனும் வந்திருந்த தகவல் தொழில்நுட்பத்துறையில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றும் மணிகண்டன் சந்திரசேகர், 37, “அனைத்து விதமான ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்துள்ளனர். குறிப்பாக தொண்டூழியர்களின் பணி பாராட்டுக்குரியது. எல்இடி திரை ஏற்பாடு கோபுரத்தின் மேலே ஏறிச்சென்று வழிபட்டதைப் போன்ற உணர்வைத் தந்தது,” என்று சொன்னார்.

“சிங்கப்பூரில் இவ்வாண்டு இக்கோயிலுடன் சேர்த்து மூன்று முருகன் கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. இதனை ஒரு நல்ல சகுனமாகவே கருதுகிறேன். இனி கொரோனா போன்ற எவ்வித துயர்களும் நம்மை நெருங்காது. நான் மூன்று குடமுழுக்கினையும் நேரில் கண்டதை வாழ்வில் மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன்,” என்று கூறினார் இல்லத்தரசியான அன்புமலர் நாகலிங்கம், 72. 

குறிப்புச் சொற்கள்
கோயில்