பொங்கோல் வீவக வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கிய நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அவர்களில் மூன்று பேர் குடியிருப்பாளர்கள். மற்றொருவர் தீ அணைப்பாளர்.
சனிக்கிழமை அதிகாலை 2.10 மணியளவில் தகவல் கிடைத்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அங்கு விரைந்தனர்.
சுமாங் வாக்கில் புளோக் 326ஏயில் உள்ள வீட்டில் தீ மூண்டிருந்தது.
அதிகாரிகள் அங்கு வருவதற்குள் 10வது மாடியில் இருந்த அந்த வீட்டிலிருந்து அனைவரும் வெளியேறிவிட்டனர்.
அப்போது மூன்று குடியிருப்பாளர்கள் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டதால் உடனடியாக அவர்கள் செங்காங் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தீ அணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் சோர்வடைந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அவர் தீயணைப்புக் குழுவைச் சேர்ந்தவர் அல்லர் என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அவராகவே வீட்டில் நுழைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
தண்ணீரை வலுவாகப் பீய்ச்சியடித்து வீட்டில் மூண்ட தீ ஒருவழியாக அணைக்கப்பட்டது.
அந்த வீட்டின் வரவேற்பு அறையில் மின்சக்தியில் ஓடும் இரு சக்கரவாகனத்துக்கு மின்சாரம் ஏற்றும்போது தீ மூண்டிருக்கலாம் என்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.