மேம்படுத்தப்பட்ட தடுப்பூசி: 6 மாதம், அதற்கும் அதிக வயதுள்ளோர் போட்டுக்கொள்ளலாம்

2 mins read
b23bfbc4-11e4-465d-813d-bbf9cc4613d3
மேம்படுத்தப்பட்ட தடுப்பூசி மருந்துகள் இறுதியில் இப்போது நடப்பில் உள்ள ஃபைசர்-பயோஎன்டெக்/கொமிர்னாட்டி, மொடர்னா/ஸ்பைக்வேக்ஸ் வகையைச் சேர்ந்த அனைத்து வகை தடுப்பூசிக்கும் பதிலாக பயன்படுத்தப்படும். - படம்: ராய்ட்டர்ஸ் 

சிங்கப்பூரில் அக்டோபர் 30ஆம் தேதி முதல் மேம்படுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் கட்டம் கட்டமாக போடப்படும் என்று சுகாதார அமைச்சு சனிக்கிழமை அறிவித்தது.

இப்போது நடப்பில் உள்ள ஃபைசர்-பயோஎன்டெக்/கொமிர்னாட்டி, மொடர்னா/ஸ்பைக்வேக்ஸ் வகையைச் சேர்ந்த அனைத்து வகை தடுப்பூசிக்கும் பதிலாக நவம்பர் 20ஆம் தேதி வாக்கில் அந்த மேம்படுத்தப்பட்ட ஊசி மருந்து பயன்படுத்தப்படும்.

சிங்கப்பூருக்குத் தடுப்பூசி மருந்து வருவதைப் பொறுத்து அமைச்சு மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை கட்டம் கட்டமாக அமல்படுத்தும். கூட்டு பரிசோதனை தடுப்பூசி நிலையம், பொதுச் சுகாதார ஆயத்த மருந்தகங்கள் அல்லது பலதுறை மருந்தகங்களில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள தடுப்பூசி நிலையம், அங்கு எந்த வகை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்பது பற்றிய விவரங்கள் https://www.gowhere.gov.sg/vaccine என்ற முகவரியில் இடம்பெற்று இருக்கின்றன.

தடுப்பூசிக்குக் காலநேர முன்பதிவு செய்ய விரும்புவோர் நேரடியாக மருந்தகத்துடன் தொடர்புகொள்ளலாம் அல்லது https://book.health.gov.sg/covid என்ற முகவரியைப் பயன்படுத்தலாம்.

மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை அதிகம் பேர் நாடுவார்கள் என்பதால் நவம்பர் 4 முதல் டிசம்பர் 2 வரை கூட்டு பரிசோதனை, தடுப்பூசி நிலையங்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்று அமைச்சு தெரிவித்து உள்ளது. இவை வழக்கமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை செயல்படுகின்றன.

பொதுமக்கள் இந்த தடுப்பூசி நிலையங்கள் செயல்படும் நேரம் பற்றியும் இதர விவரங்களையும் https://www.vaccine.gov.sg/locations/jtvc/ என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

கொவிட்-19க்கு எதிரான தலைசிறந்த பாதுகாப்பு இன்னமும் தடுப்பூசிதான் என்பதை அமைச்சு உறுதியாகக் கூறியது.

இதனிடையே, மேம்படுத்தப்பட்ட தடுப்பூசி போடத் தொடங்கப்பட்ட பிறகு இந்த ஆண்டில் அல்லது அடுத்த ஆண்டில் கொவிட்-19க்கு எதிரான கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும்படி ஆறு மாத வயதும் அதற்கு அதிக வயதும் உள்ள தகுதிபெறும் சிங்கப்பூரருக்கு ஆலோசனை கூறப்பட்டு உள்ளது.

கொவிட்-19 வல்லுநர் குழுவின் மேம்படுத்தப்பட்ட ஆகப் புதிய பரிந்துரைகள் ஏற்கப்பட்டு இருக்கின்றன. அதையடுத்து அந்த ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்