நான்கு எதிர்க்கட்சிகள் சேர்ந்து கூட்டணி

2 mins read
a87b7685-ed23-44ea-8411-9bfa210a0eea
(இடமிருந்து) தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் முகம்மது ரிட்ஜ்வான் முகம்மது, ரெட் டாட் யுனைடெட் கட்சியின் தலைவர் ரவி ஃபிலிமோன், சிங்கப்பூர் மக்கள் கட்சியின் தலைமைச் செயலாளர் ஸ்டீவ் சியா, சிங்கப்பூர் ஐக்கிய கட்சியின் தலைமைச் செயலாளர் ஆன்டி ஸு ஆகியோர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நான்கு எதிர்த்தரப்பு கட்சிகள் சனிக்கிழமை ஓர் உடன்பாட்டை எட்டி இருக்கின்றன.

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி (என்எஸ்பி), ரெட் டாட் யுனைடெட் (ஆர்டியு), சிங்கப்பூர் மக்கள் கட்சி (எஸ்பிபி), சிங்கப்பூர் ஐக்கிய கட்சி (எஸ்யுபி) ஆகிய அந்த நான்கு கட்சிகளும் கூட்டணி ஒன்றை அமைத்து இருக்கின்றன.

அதன்படி மும்முனைப் போட்டிகளைத் தவிர்ப்பது என்றும் அவை இணங்கி இருக்கின்றன. தேர்தலின் போது கொள்கை அறிக்கை ஒன்றை உருவாக்கி வேட்பாளர்களைப் பகிர்ந்துகொள்ளும் சாத்தியம் பற்றி ஆராயவும் அவை இணங்கி உள்ளன.

மக்கள் குரல் (பிவி), சீர்திருத்தக் கட்சி (ஆர்பி), மக்கள் சக்தி கட்சி (பிபிபி), ஜனநாயக முன்னணி கட்சி (டிபிபி) ஆகிய நான்கு கட்சிகளும் கடந்த ஜூன் மாதம் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.

தாங்கள் சேர்ந்து மக்கள் கூட்டணி என்ற புதிய அணி ஒன்றை அமைக்கப்போவதாக அவை அறிவித்தன.

இதைத் தொடர்ந்து இப்போது நான்கு எதிர்க்கட்சிகளின் புதிய அணி பற்றி அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டு இருக்கும் இந்த அணி எட்டு முதல் 10 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று நம்புவதாகத் தெரிவித்து உள்ளது.

புதிய அணியில் சேர்ந்து இருக்கும் கட்சிகளில் ஒன்றான எஸ்பிபி கட்சியின் தலைமைச் செயலாளர் ஸ்டீவ் சியா, தங்களுடைய அணியில் பெரிய கட்சி என்றோ பெரிய தலைவர் என்றோ யாரும் இல்லை என்றார்.

இருந்தாலும் நிர்வாக நோக்கங்களுக்காக ஆர்டியு கட்சி செயலகப் பணிகளை ஆற்றி வரும் என்று அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் பொதுத் தேர்தல் 2025 நவம்பருக்கு முன்னதாக நடக்க வேண்டும்.