டாக்சி பயணத்தின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து வாகனத்திலிருந்து இருவரும் வெளியேறியதும் 33 வயது சக்திவேல் சிவசூரியன், திரு மஞ்சுநாதா லுயிஸ் ரவியின் முகத்தில் குத்தினார்.
தடுமாறி விழுந்த திரு மஞ்சுநாதாவுக்கு தலையிலும் கழுத்திலும் காயம் ஏற்பட்டது. அவர் கடந்த 2020 ஜூலை மாதம் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, 2020 ஜூலை 18ஆம் தேதி இரவு 11 மணியளவில் கங்சா சாலையில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கிற்கு டாக்சியில் திரு மஞ்சுநாதா, ஒரு மாது, சக்திவேல், அவருடைய மனைவி ஆகியோர் சென்றுகொண்டிருந்தனர். சக்திவேலுக்கும் திரு மஞ்சுநாதாவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, டாக்சியிலிருந்து இறங்கிய பிறகும் தொடர்ந்தது. சக்திவேல் முகத்தில் குத்தியதைத் தொடர்ந்து, கீழே விழுந்த திரு மஞ்சுநாதாவுக்கு தலையில் அடிபட்டது. அதன் பிறகு அவரால் எழுந்திருக்க முடியவில்லை. இச்சம்பவத்தை நேரில் கண்டவர் ஆம்புலன்சை அழைத்ததை அடுத்து, திரு மஞ்சுநாதா இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
சக்திவேல் காயம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே தாக்கிய குற்றம் வெள்ளிக்கிழமை (அக்.27) நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. தண்டனை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்டபோது, அரசாங்க ஊழியர் ஒருவருக்கு தவறான தகவல் கொடுத்த குற்றத்தை சக்திவேல் ஒப்புக்கொண்டார்.

