குழாய் நீர் வேதிப்பொருளால் உடல்நலனுக்குப் பாதிப்பா: அறிவியல் அறிஞர்கள் ஆய்வு

குழாய் நீர் வேதிப்பொருளால் உடல்நலனுக்குப் பாதிப்பா: அறிவியல் அறிஞர்கள் ஆய்வு

2 mins read
d9e246c6-753f-408b-b1d6-4bfc1a8826e1
குளோரினும் இதர வகை நச்சுக்கொல்லிகளும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியா, வைரஸ் கிருமிகளைக் கொன்றுவிடக் கூடியவை. குழாய் நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த அவை பயன்படுத்தப்படுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் 

சிங்கப்பூரில் குழாய் நீரில் கண்ணுக்குத் தெரியாதபடி மிகக் குறைந்த அளவில் காணப்படும் ஒரு வேதி கூட்டுப்பொருள், அதிகமாக உடலில் கலந்தால் கெடுதல் ஏற்படுமா என்பது பற்றி அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

என்றாலும் அதனால் இப்போதைக்கு கவலைப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.

அத்தகைய கூட்டுப்பொருள் காரணமாக ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகளை மதிப்பிட மேலும் ஆய்வுகளை நடத்த வேண்டிய தேவை இருக்கிறது.

கார் டயர் போன்ற ரப்பர் பொருள்களில் பொதுவாகக் காணப்படக்கூடிய டிபிஜி என்ற பொருளின் துணைப் பொருளான அந்த வேதிக் கூட்டுப்பொருளே இப்போது பிரச்சினையை கிளப்பி இருக்கிறது.

டிபிஜி பொருள் எதுவும் நீர்த்தேக்கத்தில் சேர்ந்தால் அதை சிங்கப்பூரின் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் அகற்றிவிடும்.

இருந்தாலும்கூட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரிலும் அந்தப் பொருள் மீண்டும் சேர்ந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று அறிவியல் அறிஞர்கள் நம்புகிறார்கள்.

குழாய் வேலைகளில் பயன்படுத்தப்படும் ரப்பரோடு சேரும்போது தண்ணீரில் உள்ள குளோரினுடன் சேர்ந்து வினைபுரியும்போது டிபிஜி பொருள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்குள் மறுபடியும் கலந்துவிடக்கூடிய வாய்ப்பு இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

அப்படி தண்ணீரில் சேரும் பொருள் டிபிஜி-குளோரின் துணைப்பொருளாக மாறிவிடும்.

மனிதர்களின் உயிரணுக்களை ஆய்வுக்கூடங்களில் சோதித்துப் பார்த்தபோது அந்த டிபிஜி-குளோரின் துணைப்பொருள் மனிதர்களின் டிஎன்ஏ காரணிகளில் கொஞ்சம் சேதத்தை ஏற்படுத்திவிடக்கூடும் என்பது தெரியவந்தது.

நன்யாங் சுற்றுச்சூழல், தண்ணீர் ஆய்வுக் கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதைக் கண்டுபிடித்தனர்.

இதனிடையே, இது பற்றி கருத்து கூறிய அந்தக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் ஷென் ஸ்நைடர், டிபிஜி-குளோரின் துணைப்பொருள் காரணமாக சிங்கப்பூரில் உடனடியாகக் கவலைப்படக்கூடிய தேவை இல்லை என்று கூறினார்.

இதர நாடுகளில் காணப்படுவதைவிட சிங்கப்பூரில் தண்ணீரில் உள்ள அத்தகைய பொருளின் அடர்த்தி மிகமிகக் குறைவு என்றார் அவர்.

இருந்தாலும்கூட நீண்டகாலப் போக்கில் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றி ஆராய வேண்டிய தேவை இருப்பதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்