தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லீ குவான் இயூவின் தலைமுறை சாதித்ததை நினைவில்கொள்ள வேண்டும்: பிரதமர் லீ

2 mins read
c3d2c96f-59d4-4e73-97d2-4445fa753843
இவ்வாண்டின் மரம் நடும் தினத்தை முன்னிட்டு அங் மோ கியோ அவென்யூ 4ல் உள்ள புளோக் 107ன் அருகே மரம் ஒன்றை பிரதமர் லீ சியன் லூங் (வலது) நட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

திரு லீ குவான் இயூவின் நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையில், அவரும் அவரது தலைமுறையைச் சேர்ந்த தலைவர்களும் சாதித்ததை சிங்கப்பூர் நினைவில்கொள்ள வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தி உள்ளார்.

சிங்கப்பூரைப் பசுமையாக்குதல் நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய அவர், “திரு லீ குவான் இயூ சிங்கப்பூருக்காகச் சாதித்தவை ஏராளம். இந்த நாட்டை உருவாக்கினார். தற்காப்புத் திறனை உருவாக்கினார்.

“அவரது காலத்தில் உருவாக்கப்பட்ட பொது வீடமைப்பு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, பொதுப் போக்குவரத்து இவற்றுடன் பொருளியலையும் இப்போது நாம் காண்கிறோம்,” என்று தெரிவித்தார்.

சிங்கப்பூரைப் பசுமையாக்குதல் என்னும் வருடாந்திர நிகழ்வு இவ்வாண்டு, காலஞ்சென்ற திரு லீ குவான் இயூவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது. அந்நிகழ்வின் ஒரு பகுதியாக, அங் மோ கியோ அவென்யூ 4ல் உள்ள புளோக் 107ன் அருகே மரம் ஒன்றை பிரதமர் லீ நட்டார்.

சிங்கப்பூரைப் பசுமையாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க திரு லீ குவான் இயூ மேற்கொண்ட நடவடிக்கைகளை நினைவுகூரும் விதமாக அந்நிகழ்வு மேஃபிளவர் கடைத்தொகுதி மற்றும் உணவு நிலையத்தில் நடைபெற்றது.

மசெகவின் கெபுன் பாரு கிளை ஏற்பாடு செய்த அந்நிகழ்வில் மக்கள் செயல் கட்சித் தொண்டர்கள், விருந்தினர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என 800க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அங் மோ கியோ குழுத் தொகுதி, கெபுன் பாரு தனித்தொகுதி, இயோ சூ காங் தனித்தொகுதி ஆகியவற்றின் மசெக மற்றும் மசெகவின் சமூக அறநிறுவனக் கிளைகள் நிகழ்ச்சிகளை நடத்தின.

திரு லீ குவான் இயூவின் தொலைநோக்குப் பார்வையை விளக்கும் குறும்படம் ஒன்றும் நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது. பசுமைக் குழுக்களின் பணிகளை விளக்கும் அரங்குகளும் இடம்பெற்று இருந்தன.

சிங்கப்பூரைப் பசுமையாக்குதல் என்னும் 10 நிமிட ஆவணப் படம் ஒன்றும் திரையிடப்பட்டது.

சிங்கப்பூரை பூங்கா நகராக மாற்றும் நோக்குடன் 1963ஆம் ஆண்டு மரம் நடும் பிரசார இயக்கத்தை திரு லீ குவான் இயூ தொடங்கி வைத்தது முதல் தொடர்ந்து இடம்பெற்று வந்த சிங்கப்பூரின் பசுமைப் பயணத்தை அந்த ஆவணப் படம் எடுத்துக் காட்டியது.

குறிப்புச் சொற்கள்