தொடர்ந்து மீண்டு வரும் சாங்கி விமான நிலையம்: செப்டம்பரில் 4.87 மில்லியன் பயணிகள்

தொடர்ந்து மீண்டு வரும் சாங்கி விமான நிலையம்: செப்டம்பரில் 4.87 மில்லியன் பயணிகள்

2 mins read
ef0f50db-3ca0-4b9c-aca1-ec053d295c2f
செப்டம்பரில் 4.87 மில்லியன் பயணிகள் சாங்கி வழி பயணம் செய்தனர். இது கொவிட்-19க்கு முந்தைய அளவில் 89% ஆகும். - படம்: எஸ்டி கோப்புப்படம்

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் கொவிட்-19க்குப் பிறகு தொடர்ந்து மீட்சி கண்டு வருகிறது. அந்த விமான நிலையத்தின் வழியாக கடந்த செப்டம்பரில் 4.87 மில்லியன் பேர் பயணம் செய்தனர்.

இந்த எண்ணிக்கை கொவிட்-19க்கு முன் 2019ஆம் ஆண்டின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 89% ஆக உள்ளது. சாங்கி விமான நிலையக் குழுமம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் இது தெரியவருகிறது.

இந்த ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரைப்பட்ட மூன்றாவது காலாண்டில் பயணிகளின் எண்ணிக்கை 15.3 மில்லியன்.

இதுவும் கொவிட்-19க்கு முந்தைய 2019ஆம் ஆண்டின் எண்ணிக்கையில் 89% ஆகும்.

சீனா, ஆஸ்திரேலியா, இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து அதிகம் பேர் சிங்கப்பூருக்கு வந்து சென்றனர்.

இந்த ஆண்டின் அக்டோபர் 1 ஆம் தேதி நிலவரப்படி சாங்கியில் 94 விமான நிறுவனங்கள் 6,400க்கும் மேற்பட்ட வாராந்திர சேவைகளை அட்டவணைப்படி நடத்தின. அவை உலகம் முழுவதிலும் உள்ள 49 நாடுகள், பகுதிகளைச் சேர்ந்த 151 நகர்களுடன் சிங்கப்பூரை இணைத்தன.

சாங்கி, மூன்றாவது காலாண்டில், சீனாவின் பெய்ஜிங் டாக்சிங் விமான நிலையத்துடன் தனது முதலாவது தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது. சைனா ஈஸ்டர்ன் நிறுவனம் ஜூலை 20ஆம் தேதி இரண்டு விமான நிலைங்களுக்கும் இடையில் சேவையைத் தொடங்கியது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 2024 ஏப்ரலில் சிங்கப்பூருக்கும் பிரசல்ஸ் நகருக்கும் இடையில் சேவையைத் தொடங்கும். அந்தக் குழுமத்தின் பயணிகள் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் செப்டம்பரில் 24.8% அதிகரித்தது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் அதன் மலிவுக் கட்டண ஸ்கூட் நிறுவனமும் செப்டம்பரில் 2.9 மில்லியன் பயணிகளைச் சுமந்து சென்றன. இது முந்தைய ஆண்டைவிட 36% அதிகம்.