சிங்கப்பூர்-மலேசிய பிரதமர்கள் சந்திப்பு, பேச்சுவார்த்தை

2 mins read
a8303d6c-d3c3-4913-b985-a809a0e7a241
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் (இடது) கடந்த ஜனவரியில் சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்தார். இந்த இரண்டு தலைவர்களும் அக்டோபர் 30ஆம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பார்கள். - கோப்புப் படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர், மலேசியப் பிரதமர்கள் ஆண்டுதோறும் சந்தித்து இரு தரப்பு விவகாரங்கள் பற்றி விவாதிப்பது வழமை.

அந்தச் சந்திப்பின்போது புதிய துறைகளில் இடம்பெறக்கூடிய ஒத்துழைப்பு பற்றியும் அவர்கள் பேசுவார்கள்.

‘சிங்கப்பூர்-மலேசியத் தலைவர்கள் ஓய்விடச் சந்திப்பு’ என்று குறிப்பிடப்படும் அந்தச் சந்திப்புத் தொடரில் 10வது சந்திப்பு சிங்கப்பூரில் இப்போது நடக்கிறது.

அதற்காக, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கின் அழைப்பின் பேரில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஞாயிறு-திங்கள் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்து இருக்கிறார்.

சிங்கப்பூர்-மலேசியத் தலைவர்கள் ஓய்விடச் சந்திப்பு, கொவிட்-19க்குப் பிறகு முதன் முதலாக இப்போதுதான் நடக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் ஒத்துழைப்பை மதிப்பிட்டுப் பார்ப்பதற்கான வாய்ப்பாகவும் இந்தச் சந்திப்பு திகழ்கிறது என சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை அறிக்கையில் தெரிவித்தது.

இதற்கு முன் இரு நாட்டின் பிரதமர்களும் 2019 ஏப்ரலில் புத்ராஜெயாவில் சந்தித்துப் பேசினர்.

மலேசியாவின் நிதி அமைச்சருமான அன்வார் திங்கட்கிழமை சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தைச் சந்திப்பார்.

சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக திரு தர்மன் செப்டம்பர் 14ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார்.

அதற்குப் பிறகு இந்த இரண்டு தலைவர்களும் திங்கட்கிழமை முதன்முதலாகச் சந்திப்பார்கள்.

திரு அன்வார் திங்கட்கிழமை பிரதமர் லீயையும் சந்திப்பார்.

பிறகு இரண்டு பிரதமர்களும் அவர்களுடைய குழுவினரும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவர்.

முக்கியமான துறைகளில் ஒத்துழைக்க வகைசெய்யும் உடன்பாடுகள், தலைவர்களின் முன்னிலையில் கையெழுத்திடப்படும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

திரு அன்வார், எட்டு அமைச்சர்கள், இதர முக்கிய பிரமுகர்களுடன் சிங்கப்பூர் வந்திருக்கிறார்.

திரு அன்வார் 2022 நவம்பரில் பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அது முதல் அவர் இப்போது சிங்கப்பூருக்கு மூன்றாவது முறையாக வருகை அளித்து இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்