சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி அடுத்த ஆண்டில் வேகமெடுக்கும்

சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி அடுத்த ஆண்டில் வேகமெடுக்கும்

2 mins read
f8c7a2b3-37a7-4d9f-8f2b-ffbf2ba9ad8f
சிங்கப்பூர் ஏற்றுமதி மீட்சியடைவதாலும் உலகளாவிய வட்டி விகித உயர்வு நிறுத்தமும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு உதவும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி அடுத்த ஆண்டில் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டின் பெரும்பகுதி காலத்தில் பொருளியல் தேக்கமடைந்தது.

இந்த நிலையில் வருங்காலத்தில் பணவீக்கம் மெதுவடையும். வருங்காலத்தில் பொருள் சேவை வரி உயர்வு இருந்தாலும் (ஜிஎஸ்டி) பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று திங்கட்கிழமை சிங்கப்பூரின் மத்திய வங்கி அறிவித்தது.

இவ்வாண்டின் முற்பாதியில் 0.5 விழுக்காடு முதல் 1.5 விழுக்காடு வரை பொருளியல் வளர்ச்சி இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு அடுத்த ஆண்டு வளர்ச்சி வேகமெடுக்கும் என்று மத்திய வங்கியான சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்தது.

உலகளாவிய தேவை அதிகரிப்பதால் சிங்கப்பூரின் ஏற்றுமதி மீட்சியடையும். அது மட்டுமல்லாமல் வட்டி விகித உயர்வு உலகளவில் இருக்காது. இது, சிங்கப்பூரின் நிதித்துறைக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று ஆணையம் குறிப்பிட்டது.

“மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024ஆம் ஆண்டின் 2வது பாதியில் படிப்படியாக மேம்படும். ஆண்டு முழுவதுக்குமான அந்த வளர்ச்சி எதிர்பார்க்கப்படும் அளவை நெருங்கும்,” என்று ஆணையம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ஆனால் சாத்தியமான வளர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெரிவிக்கப்படவில்லை.

இருந்தாலும் வளர்ச்சி இரண்டு விழுக்காட்டிலிருந்து மூன்று விழுக்காடு வரை இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

2022ஆம் ஆண்டு அக்டோபரிலிருந்து ஏற்றுமதியில் முக்கியமான தயாரிப்புத் துறை சிக்கலில் இருந்து வருகிறது. அந்த காலக்கட்டத்தில் மின்னியல் பொருள்களுக்கான தேவை குறைந்திருந்தது. வட்டி விகித உயர்வும் இருந்தது.

எண்ணெய் அல்லாத ஏற்றுமதிகள் இதே காலகட்டத்தில் குறைந்தன.

உலகளாவிய வட்டி விகித உயர்வால் கடன் சுமை அதிகரித்தது. இதனால் சிங்கப்பூரின் நிதித் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது.

கொள்ளை நோய் முடிவில் உள்நாட்டைச் சார்ந்த சேவைத் துறையும் பயணம் தொடர்பான தொழில் துறையும் மறுபடியும் சூடுபிடித்தது. இதனால் மோசமடைந்த உற்பத்தித் துறையாலும் பலவீனமான நிதித் துறையாலும் பொருளியல் மந்தநிலை தவிர்க்கப்பட்டது என்று மத்திய வங்கி தெரிவித்தது.

இந்த நிலையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மின்னியல் துறை வளர்ச்சிக்கான அறிகுறிகள் தெரிவதால் சிங்கப்பூர் இதில் பலனடைந்து 2024ஆம் ஆண்டில் பொருளியல் வளர்ச்சி ஏறுமுகமாக இருக்கும்.

வட்டி விகிதம் நிலைப்படுவதால் நிதித் துறை மீள்வதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. இது 2024ஆம் ஆண்டில் அத்துறை மிதமான வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்றது ஆணையம்.

உலகம் முழுவதும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் உட்பட அமெரிக்க மத்திய வங்கியும் ஐரோப்பிய மத்திய வங்கியும் பணவீக்கத்தை ஈடுகட்ட வட்டி விகித உயர்வை நிறுத்தி வைக்கப் போவதாக தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்